பத்தொன்பதே வயதில் வர்த்தக உலகின் நட்சத்திரமாகி 37 வயதில் நீதிமன்றத்தில் உதிர்ந்து விழுந்த எலிசபெத் ஹோல்ம்ஸ்.

தனது பத்தொன்பதாவது வயதில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரே இரத்தத்துளியை வைத்து ஒருவருக்கு இருக்கும் 240 ஆரோக்கியக் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கக்கூடிய இயந்திரமொன்றைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டு தெரானோஸ் [Theranos] நிறுவனத்தை ஸ்தாபித்தார். அவரது கண்டுபிடிப்பு மிகப்பெரும் மருத்துவ அதிசயம் என்று வர்த்தக உலகத்தால் போற்றப்பட்டது.

அடுத்தடுத்த வருடங்களில் மிகவும் பணபலமுள்ள, அதிகார பலமுள்ளவர்கள் பலரும் தெரானோஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். நிறுவனத்தின் உயர் நிர்வாகியாகச் செயற்பட்ட ஹோல்ம்ஸ் 700 மில்லியன் டொலரை முதலீடுகளாக ஈர்த்தெடுக்க நிறுவனத்தின் பங்குகளின் பெறுமதி 9 பில்லியன் டொலரைத் தொட்டது.

2014 இல் Forbes சஞ்சிகையால் உலகின் மிக வெற்றிபெற்ற பெண் நிறுவனர் என்று தெரிவுசெய்யப்பட்ட ஹோல்ம்ஸ் அதற்கடுத்த வருடம் டைம்ஸ் சஞ்சிகையின் உலகின் 100 முக்கியமானவர்கள் இடத்தைப் பெற்றார். அடுத்த ஸ்டீவ் ஜொப் என்றும் ஹோல்ம்ஸை விண்ணுக்கு உயர்த்திப் பேசின வர்த்தகச் சஞ்சிகைகள். 

ஜோர்ஜ் ஷுல்ட்ஸ், ஹென்ரி கிஸ்ஸிங்கர், ஜேம்ஸ் மத்தி ஆகிய அமெரிக்க அமைச்சர்கள் அவரது நிறுவனத்தில் நிர்வாகிகளானார்கள். பில் கிளிண்டன், ஜோ பைடன் ஆகியோரும் ஹோல்ம்ஸைப் புகழ்ந்தார்கள். பில்லியனரான முர்டொக் பல மில்லியன்களைத் தெரானோஸில் முதலீடு செய்தார்.

தெரானோஸின் தொழில்நுட்ப இயந்திரம் 2013 இல் உலகெங்கும் இரத்தப் பரிசோதனைக்காக விற்பனைக்கு வந்தது. 240 ஆரோக்கியக் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கக்கூடிய அது ஒரு ஆய்வுகூடமென்றும் அதை எவராலும் வாங்கிக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என்று தெரானோஸ் குறிப்பிட்டு அதைச் சாதாரண மருத்துவக் கடைகளிலெல்லாம் விற்பனைக்குக் கொண்டுவந்தது.

பெரும் புகழ்பெற்ற இயந்திரத்தை வாங்கியவர்களோ அதன் பரிசோதனைகள் மீண்டும், மீண்டும் தவறாகச் செயற்பட்டு வருவதைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். நிறுவனத்தின் மீதான விமர்சனங்கள் சகல் பக்கங்களிலிலிருந்தும் வெளியாகின. தெரானோஸ் தனது சொந்தப் பரிசோதனைச் சாலையில் தனது இயந்திரத்தைப் பாவிப்பதாகக் கூறினாலும், அதற்கு முன்னர் சாதாரணமாகப் பாவிக்கப்பட்ட இரத்தப் பரிசோதனை முறைகளையே இரகசியமாகப் பாவித்ததும் வெளியாகியது. 

நிறுவனத்தின் மீதிருந்த நம்பிக்கையென்ற நீர்க்குழியை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கடைசியாக உடைத்தது. அந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் பற்றியும், நிறுவனம் பற்றியும் ஆழமாக அலசி அந்தப் பத்திரிகை ஒரு தொடர்கட்டுரையை வெளியிட்டது. அதையடுத்து அமெரிக்க அதிகாரிகளின் கழுகுக்கண்கள் அந்தக் கட்டுரையின் விபரங்களை ஆராய்ந்து அத்தொழில்நுட்பத்திலிருக்கும் பெரும் தவறுகளை வெளியிட்டனர். விளைவாக தெரானோஸ் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது.

தெரானோஸில் முதலீடு செய்தவர்களும், அதன் தொழில்நுட்பத்தை வாங்கியவர்களுமாக நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். ஹோல்ம்ஸ் மீது 11 குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டன. அவைகளில் நாலை நீதிமன்றம் ஒதுக்கியது. மூன்றில் அவர் தவறு செய்ததாக நீதிபதிகள் ஒன்று சேர்ந்து கூறியிருக்கிறார்கள். மேலும், மூன்று குற்றச்சாட்டுக்களில் நீதிபதிகள் வெவ்வேறு முடிவெடுத்தார்கள்.

எலிசபெத் ஹோல்ம்ஸ் தன் பங்குக்குத் தனது முன்னாள் காதலரும் சக நிர்வாகியுமான ரமேஷ் பல்வானி என்ற பாகிஸ்தான், இந்தியப் பின்னணி கொண்ட சிந்தியரைச் சுட்டிக் காட்டுகிறார். பல்வானியின் கட்டுப்பாட்டில் தான் இருந்ததால் தன்னால் முழுவதுமாக இயங்க முடியாதிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். பல்வானி மீதான வழக்கு இவ்வருடம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். 

எலிசபெத் ஹோல்ம்ஸ் மீதான தீர்ப்புக்கான தண்டனை 80 வருடச் சிறைவாசம் வரை ஆகலாம் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் தன் மீதான தீர்ப்பை முதல் கட்டமாக மேன் முறையீடு செய்யவிருக்கிறார். தெரானோஸ் நிறுவனம், ஹோல்ம்ஸ் ஆகியவற்றின் உயர்வும், வீழ்ச்சியும் பெரிதும் பேசப்பட்டு ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்