டச்சு அரச குடும்பத்தினர் பவனி வந்த தங்க ரதம் இனிமேல் பாவிக்கப்படாமல் அருங்காட்சியகத்தில் நிறுத்தப்படும்.

அரச குடும்பத்தினர் இதுவரை உத்தியோகபூர்வமாகப் பவனிவந்த தங்கரதத்தை, தான் இனிமேல் பாவிக்கமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறர் நெதர்லாந்தின் அரசர். வில்லியம் அலெக்சாந்தரின் அந்த முடிவுக்குக் காரணம் குறிப்பிட்ட தங்கரதத்தில் வரையப்பட்டிருக்கும்  “Tribute from the Colonies” என்ற சித்திரமாகும்.  

பீடமொன்றில் வீற்றிருக்கும் வெள்ளைப் பெண்ணொருத்தி அச்சித்திரத்தில் நெதர்லாந்து ஆகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆபிரிக்க, ஆசியர்கள் அப்பெண்ணைச் சிரந்தாழ்த்தி, முழங்காலிலிருந்து வணங்கித் தமது பொருட்களை அவளுக்குக் கொடுப்பதாகக் காட்டுகிறது. அந்த ரதத்தில் நெதர்லாந்தின் அரசர் செப்டெம்பர் மாதத்தில் டச் பாராளுமன்றம் புதிய கூட்டத்தொடருக்காகத் திறக்கப்படும்போது ஹாக் நகரில் பவனிவருவதுண்டு.

“இனிமேல் அந்த ரதத்திற்கு நெதர்லாந்து தயாராகும்போதுதான் அது பாவிக்கப்படும்,” என்று அரசர் குறிப்பிட்டிருக்கிறார். நிறவாதத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பான Black Lives Matter அந்தச் சித்திரங்கள் டச் அரசைக் காலனித்துவக்கால மனோபான்மையுடன் காட்டுவதாகக் கடுமையாக விமர்சித்து அதுபற்றிய கடுமையான சர்ச்சையை நாட்டில் எழுப்பியிருக்கிறது.

“வெறுமனே பழங்காலத் தவறுகளை, அதன் சின்னங்களை, சித்திரங்களை அழிப்பதோ, குப்பையாக்குவதிலோ எந்தப் பயனுமில்லை. அவைகள் நடந்த காலத்தை இந்தக் காலத்தின் கண்ணாடியைக் கொண்டு காண்பதும், அதனால் சமூகம் பிளவுபடுவதும் ஏற்றுக்கொள்ளப்படலாகாது. அவை எம் சமூகத்தை ஒன்றுபடுத்துமளவுக்கு எம் மனோநிலை பக்குவமடையும் காலம் வரை அவைகளை ஒதுக்கிவிடலாம்,” என்கிறார் டச் அரசர்.

கடந்த வருடம் நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் டச்சுக்காரர்களின் காலனித்துவ கால நடவடிக்கைகளை விபரிக்கும், விமர்சிக்கும் கண்காட்சி ஒன்று நடாத்தப்பட்டது. அச்சமயத்தில் ஆம்ஸ்டர்டாம் ஆளுனர் பெம்கே ஹல்சேமா டச்சுக்காரர்களின் அடிமை வியாபாரம் போன்றவைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்