ஐரோப்பாவிலேயே அதிக எரிசக்தியைச் சூரியக் கலங்கள் மூலம் தயாரிக்கும் நாடு நெதர்லாந்து.

படுவேகமாக நாட்டின் இயற்கைவள எரிசக்தித் தயாரிப்பை அதிகரித்து ஐரோப்பாவிலேயே அதை அதிகமாகத் தயாரிப்பவர்களாக மாறியிருக்கிறது நெதர்லாந்து. 2019 இல் நாட்டுக்குத் தேவையான 14 % எரிசக்தியை காற்று, சூரிய ஒளி மூலமாகத் தயாரித்த நெதர்லாந்து 2021 இல் 25 % எரிசக்தியைத் தயாரித்தது. இவ்வருட ஆரம்பத்தில் ஜேர்மனியையும் அவ்விடயத்தில் முந்தியிருக்கிறது.

இவ்வருட மே – ஜூன் மாதங்களில் சூரிய சக்தியால் மட்டுமே நெதர்லாந்து 18 % எரிசக்தியைத் தயாரித்தது.  Nieuw-Bien, Lelystad, Nijmegen ஆகிய நகரங்களில் நெதர்லாந்தின் இயற்கைச்சக்தியாலான எரிசக்தித் தயாரிப்பு நடந்துவருகிறது.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சூரியசக்தியை எரிசக்தியாக மாற்றும் மையமான  Nieuw-Buinen எதிர்பார்த்ததை விட 40 % அதிக எரிசக்தியைத் தயாரிக்கிறது. அதனால் அவற்றை முழுசாகப் பாவிக்குமளவுக்கு வி நியோகம் செய்யமுடியாமல் ஒரு பகுதி வீணாகிறது. அந்த எரிசக்தியைத் தேக்கிவைப்பதற்காக Lelystad நகரில் Buffalo Battery என்ற பெயரிலான நெதர்லாந்திலேயே மிகப்பெரிய மின்கலத்தை நிறுவி வருகிறது நெதர்லாந்து. சுமார் 20,000 வீடுகளுக்கான மின்சாரத்தைக் கொடுக்கக்கூடிய அந்த மாபெரும் மின்கலத்தை பின்லாந்தின் நிறுவனமொன்று தயாரித்திருக்கிறது. அதன் மூலம் அதிகப்படியாகத் தயாராகும் எரிசக்தியை பரவலாகப் பாவிக்க வழிசெய்யப்படுகிறது.

Nijmegen நகரிலோ சூரியசக்தியைத் தேக்கி மின்சக்தியாக்கும் கலங்கள் காணுமிடத்திலெல்லாம் பொருத்தப்பட்டிருக்கின்றன என்பது ருசிகரமான விடயம். காரியாலயங்களின், வீடுகளின் சுவர்கள், வாசல்கள், சாளரங்கள், வீதி விளக்குகள் மட்டுமன்றி துவிசக்கரவண்டிகளை ஓட்டும் வீதிகளிலும் எரிசக்தி தயாரிக்கும் கலங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கப்படவிருக்கும் தீர்மானம் ஒன்றின்படி 2025 முதல் சகல பொதுக் கட்டடங்களிலும், 2029 இன் பின்னர் கட்டப்படும் சகல கட்டடங்களிலும் சூரியக்கதிரை எரிசக்தியாக்கும் கலங்களைக் கட்டாயம் பொருத்தவேண்டும். பெரும்பாலான அளவில் அக்கலங்கள் பாவிக்கப்படும்போது அவைகளின் விலைகள் குறையுமென்பதால் சூரிய ஒளியைப் பெறக்கூடிய நிச்சயமான இடங்களில் மட்டுமன்றி சிறிதளவு சூரிய ஒளி பெறும் இடங்களிலும் பொருத்தலாம் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *