சிரியக் குர்தீஷ் அதிகாரம் அல்-ஹோல் முகாமில் தீவிரவாதிகளைக் களையெடுக்கிறார்கள்.

இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காக மிலேச்சத்தனமாகப் போரிட்டு வந்த ஐ.எஸ் அமைப்பு மீண்டும் சிரியாவிலிருக்கும் அல்-ஹோல் சிறை முகாமுக்குள் வேர்விட்டிருப்பதாகப் பல பகுதிகளிலுமிருந்து செய்திகள் வருகின்றன. அதே தீவிரவாத அமைப்பினரைக் கொண்ட சிறையான அதற்குள்ளேயே அவர்களின் சித்தாந்தம் மீண்டும் அங்கே வாழும் பெண்களால்  அவர்களுடைய குழந்தைகளிடையே ஊட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. 

https://vetrinadai.com/news/al-hol-prison-camp-syria-kurdish

தமது நாடுகளால் உள்ளே வர அனுமதிக்கப்படாத பல ஐரோப்பிய நாட்டுக் குடிமக்களும் அங்கே வாழ்கிறார்கள். டென்மார்க், சுவீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஊடகங்களின் மூலமும் அல்-ஹோல் சிறைமுகாமுக்குள் வாழும் அந்தந்த நாட்டினரை விரைவில் நாட்டுக்குள் கொண்டுவந்து விசாரித்துத் தண்டனை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது. அங்கே வாழும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதத்தைப் பரப்புகிறவர்களாக மாறமுதல் அவர்களைத் தீவிரவாதிகளான அவர்களின் தாய்மாரிடமிருந்து பிரித்தெடுக்கவேண்டுமென்ற குரலும் பலமாக ஒலிக்கிறது. 

கடந்த வருடத்தில் மட்டும் அந்த முகாமுக்குள் தம்மை ஆதரிக்காத சுமார் 40 பேரைத் தீவிரவாதிகள் கொலை செய்திருப்பதாகத் தெரியவருகிறது. அத்துடன் அங்கிருக்கும் சிலர் வெளியே கடத்தப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைய ஐ.எஸ் இயக்கத்தினர் உதவியிருக்கின்றனர். அப்படி நுழைந்தவர்கள் அந்தந்த ஐரோப்பிய நாடுகளில் கைது செய்யப்பட்டு அவர்களின் பிள்ளைகள் சமூக சேவையினரிடம் வளரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. வயது வந்தவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டு விசாரணைச் சிறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சமீபத்தைய கணக்கெடுப்புக்களின்படி அச்சிறைமுகாமுக்குள் வாழும் சுமார் 60,000 பேரில் பாதிப்பேர் ஈராக்கியர்கள், 20,000 பேர் சிரியர்கள். வெளி நாட்டுக் குடிமக்கள் சுமார் 2,500 பேராகும். அங்கிருந்து தப்பியோடுபவர்கள் பக்கத்து நாடுகளான ஈராக், சிரியா போன்றவைகளிலும் தீவிரவாதத்தை வளர்க்கக்கூடியவர்கள் என்று சிரிய குர்தீஷ் நிர்வாகம் குறிப்பிடுகிறது. 

சனியன்று அல்-ஹோல் முகாமுக்குள் குர்தீஷ் நிர்வாகத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட களையெடுப்புக்களின் முன்னர் அங்கே வேலை செய்பவர்களெல்லோரும் வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். சுமார் 30 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் பத்து நாட்களாவது தமது விசாரணைகளும், கைதுகளும் தொடரும் என்று குர்தீஷ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *