உக்ரேனின் இரண்டு பிராந்தியங்களைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்த ரஷ்ய பாராளுமன்றத்தில் மசோதாக்கள்.

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய எல்லையை அடுத்திருக்கும் இரண்டு பிராந்தியங்களைத் சுதந்திரத் தனி நாடுகளாகப் புத்தின் பிரகடனப்படுத்தவேண்டும் என்று கோரும் மசோதாக்களிரண்டு செவ்வாயன்று ரஷ்யப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படுகின்றன. டொனெஸ்க், லுகான்ஸ்க் ஆகிய அப்பிராந்தியங்களில் ரஷ்யா ஆதரவு இயக்கங்கள் உக்ரேன் இராணுவத்துடன் போரில் ஈடுபட்டிருக்கின்றன. ரஷ்ய ஆதரவாளர்களுக்கு ரஷ்ய அரசு பின்னணியிலிருந்து உதவுகிறது.

ஒரு மசோதா லுகான்ஸ்கையும், டொனெஸ்க்கையும் தனி நாடுகளாகப் பிரகடனப்படுத்தும்படி ஜனாதிபதி புத்தினை வேண்டிக்கொள்கின்றன. மற்றையது அந்தக் கோரிக்கையை ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு உட்பட்ட மற்றைய அமைச்சுகளுக்கு அனுப்பி அதை நிறைவேற்றுவது எப்படியென்ற ஆலோசனைகளைக் கோருகின்றன. அவ்விரண்டில் எது அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அந்த வழியில் ரஷ்யா நகரவேண்டும் என்கின்றது.

ரஷ்யப் பாராளுமன்றம் அவைகளிலொன்றை நிறைவேற்ற முடிவுசெய்யுமானால் அது பிரான்ஸ், ஜேர்மனியின் உதவியுடன் 2014 இல் உருவாக்கப்பட்ட மின்ஸ்க் ஒப்பந்தத்தை ரஷ்யா மீறுவதாக இருக்கும். அது ஏற்கனவே சூடாகியிருக்கும் உக்ரேன்- ரஷ்யா உறவுகளில் மேலும் சிக்கலை உண்டாக்கும்.

சாள்ஸ் ஜெ. போமன்