ஹொலிவூட் அகாடமியிலிருந்து வில் ஸ்மித் ராஜினாமா செய்தார்.
நடந்து முடிந்த வருடாந்தர ஹொலிவூட் விழாவில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தழித்துக்கொண்டிருந்த கிரிஸ் ரொக்கின் கன்னத்தில் வில் ஸ்மித் அறைந்த சம்பவத்தின் எதிரொலியாக நடவடிக்கைகள் தொடர்கின்றன. வில் ஸ்மித் அங்கே வன்முறையாக நடந்துகொண்டதைப் பற்றிய விசாரணைகளை ஹொலிவூட் அகாடமி நடத்தவிருக்கிறது. அதற்கு ஆரம்பமாகவே வில் ஸ்மித் அந்த அமைப்பிலிருந்து [Hollywood’s Academy of Motion Picture Arts and Sciences] விலகிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்.
“குறிப்பிட்ட அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான விசாரணைகளுக்காகவே நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். எனது நடத்தைக்காக அவர்கள் என்மீது எடுக்கப்போகும் எந்த ஒழுங்கு நடவடிக்கைகளையும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வேன். அகாடமியின் 94 வது பரிசு விழாவில் எனது நடத்தை அதிர்ச்சிக்குரியது, வேதனைக்குரியது, பொருத்தமில்லாதது,” என்று அந்த விழாவில் சிறந்த நடிகர் பரிசைப் பெற்ற வில் ஸ்மித் குறிப்ப்பிட்டிருக்கிறார்.
ஒஸ்கார் பரிசை ஏற்றுக்கொண்டபோது “காதலுக்காக மனிதர்கள் பைத்தியத்தனமான காரியங்களைச் செய்யக்கூடும்,” என்று தான் கிரிஸ் ரொக்கை அடித்ததற்குச் சமாளிப்பாகச் சொன்ன வில் ஸ்மித் மறு நாளே பகிரங்கமாக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். “வன்முறை என்றுமே ஒரு காரணத்துக்கும் தீர்வாக இருக்கலாகாது. இன்னொரு முறை அப்படியொரு செயலை நான் செய்யமாட்டேன்,” என்று அவர் விழாவின் பின்பு பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒஸ்கார் விழாவின்போது விஸ் ஸ்மித் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காக ஒஸ்கார் அமைப்பின் மீது சர்வதேச அளவில் பல விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. உடனடியாகத் தாம் நடவடிக்கை எடுத்திருக்காததற்காக அவர்களும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். அதையடுத்து, வில் ஸ்மித்தை அந்த அமைப்பிலிருந்து வெளியேற்றவேண்டும் என்ற குரலும் பலமாக எழுந்திருக்கிறது.
ஒஸ்கார் அமைப்பின் நடவடிக்கைகளில் ஒன்றாக வில் ஸ்மித் வெளியேற்றப்படுவதும் இருக்கும் என்பதாலேயே அவர் முன்னெச்சரிக்கையாக அதிலிருந்து தானாகவே விலகியிருக்கிறார் என்று கருதப்படுகிறது. அதன் மூலம் தன் மீது எழுந்திருக்கும் பலமான எதிர்ப்பு அலையைச் சாந்தப்படுத்தவும் அவர் முயல்கிறார் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்