“உக்ரேனுக்காக ஒன்று திரளுங்கள்,” உண்டியல் குலுக்கல் சுமார் 10 பில்லியன் எவ்ரோக்களைச் சேர்த்தது.
சர்வதேச அளவில் அரசியல் தலைவர்களையும், நிறுவனங்களையும், பணக்காரர்களையும் ஒன்று சேர்ந்து உக்ரேனுக்கும், அதன் அகதிகளுக்கும் உதவ நிதி சேர்ப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டர் லெயோனும், கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுருடுவும் சேர்ந்து ஒழுங்கு செய்த இந்த நிகழ்ச்சியில் போலந்தின் ஜனாதிபதி அந்திரே டுடாவும் கலந்துகொண்டார். உக்ரேனிய ஜனாதிபதி செலின்ஸ்கி இணையத்தளத் தொடர்பு மூலம் கலந்துகொண்டார்.
“நான் கியவுக்கு விஜயம் செய்திருந்தேன். அதையடுத்து புச்யா நகருக்கும் சென்றேன். நான் அங்கே கண்ட கோரமானவைகளை எடுத்துச் சொல்ல வார்த்தைகளில்லை. ரஷ்ய ஜனாதிபதியின் அசிங்கமான போரை எதிர்த்துப் போராடும் எங்கள் உக்ரேன் நண்பர்களை நான் மெச்சுகிறேன்,” என்று சனிக்கிழமை வார்சோவாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார் உர்சுலா வொன் டர் லெயோன்.
நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதிலிருந்தும் கிடைத்த 9.1 பில்லியன் எவ்ரோக்களுடன் 1 பில்லியன் எவ்ரோவை ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருந்தி நிதியும் சேர மொத்தமாக 10.1 பில்லியன் எவ்ரோக்கள் சேர்ந்தன.
சர்வதேச நட்சத்திரங்களான ஓபர விண்ட்பிரே, பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ், புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் உட்படப் பலரும் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
சாள்ஸ் ஜெ. போமன்