பிரிட்டிஷ் ஆரோக்கிய சேவையின் அவசரகால மருத்துவ சேவை மிகவும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.
பிரிட்டிஷ் மருத்துவ சேவையின் அவசரகாலப் பிரிவுகள் மிகப் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. பாஸ்கு விடுமுறை நாட்களில் அங்கே வருபவர்களின் காத்திருப்பு நேரம் மிகவும் அதிகரித்திருக்கிறது. மருத்துவர்கள் அளவுக்கதிகமான நேரம் வேலை செய்யவேண்டியிருக்கிறது. நோயாளிகளை எடுத்துவர அனுப்பப்படும் வாகனங்களும் போதாமையாக இருக்கிறது. நிலைமைகளை வெளிப்படுத்தி பொதுமக்களை எச்சரித்திருக்கின்றன பிரிட்டிஷ் மருத்துவசாலைகள்.
கொவிட் 19 பரவலால் நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான பகுதிகள் ஒதுக்கப்படுவதால் மருத்துவசாலைக்கு வரும் நோயாளிகளுக்கான இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம் மருத்துவ சேவையாளர்களிடையேயும் தொற்று ஏற்பட்டிருப்பதால் போதுமான அளவு ஊழியர்கள் சேவையில் இல்லை.
சில நகரங்களின் மருத்துவசேவை அவசரகாலச் சிகிச்சைப் பிரிவினர், “மிகவும் அவசரமாகச் சிகிச்சை வேண்டுமென்றால் மட்டும் எங்களை நாடுங்கள், இல்லையேல் சிகிச்சைக்காக நாடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்,” என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அவசரகாலச் சிகிச்சை தேடியவர்களைக் கொண்டுவந்த அம்புலன்ஸ்கள் சிலவற்றில் நோயாளிகள் பாதி நாளைச் செலவிட வேண்டியதாயிற்று. ஒரே சமயத்தில் 20 க்கும் அதிகமான நோயாளிகள் அம்புலன்ஸிலேயே காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பல வருடங்களாகவே பிரிட்டிஷ் அரசுகள் மக்கள் ஆரோக்கிய சேவைக்கான செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. அதன் விளைவாக மருத்துவ மனைகளில் இடப் பற்றாக்குறை, தேவையான ஊழியர்கள் இல்லாமை உடபட அவசரகாலச் சிகிச்சை சேவையில் நெருக்கடி ஆகியவை கடந்த சில வருடங்களாகவே நாட்டில் நிலவிவருவதாகப் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டு வந்திருக்கிறன.
மார்ச் மாதத்தில் மருத்துவமனைகளின் அவசரகாலப் பிரிவை நாடியவர்களில் 71 % விகிதமானோர் நான்கு மணி நேரத்துக்குச் சிகிச்சை பெற ஆரம்பித்திருந்தனர். அதுவே மூன்று வருடங்களுக்கு முன்னர் 87 % ஆக இருந்தது. அவசரகால மருத்துவமனை மருத்துவர்களின் சங்கத் தலைவர் தமது பிரிவுகளின் சேவையானது நாட்டின் பல பகுதிகளில் மருத்துவமனைகளின் மற்றைய பிரிவுகளை விட மோசமாகியிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்