“இயற்கை அழிவுகளுக்கு காரணம் மனிதர்கள் தான்” – சர்வதேச பூமி நாள் இன்று
நாம் பிறந்து, வாழ்ந்து பின்னர் இந்த மண்ணை விட்டுப் போகும்வரை இந்த பூமிதான் எங்களுக்குத் தேவையான நீர், சுத்தமான காற்று, உணவு உட்பட பிள்ளையின் தேவையை நிறைவு செய்யும் தாயாக பல ஆயிரம் ஆண்டுகளாக வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாங்களோ தாயின் அருமை அறியாத பிள்ளைகளைப் போல கொஞ்சம் கொஞ்சமாக எமது பூமித் தாயை நஞ்சூட்டிக் கொண்டிருக்கிறோம்.
காலநிலை மாற்றம், கடும் வரட்சி, வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, ஆழிப்பேரலைகள், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போதெல்லாம் இயற்கையைச் திட்டித்தீர்க்கும் நாங்கள், அதற்கு எமது செயற்பாடுகளே காரணம் என்பதை உணர்வதில்லை. எங்கள் செயற்பாடுகளே பல இயற்கையழிவுகளுக்குக் காரணம் என்று அறிந்தவர்கள் சொன்னாலும் அது எமது காதில் ஏறுவதில்லை.
கட்டுப்பாடற்ற வகையில் காடுகளை அழித்தல், அரிய உயிரினங்களை வேட்டையாடுதல், தொடர்ந்தும் உயிரினங்களின் பல்லினத்தன்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடல், விவசாயத் தேவைகளுக்கு தொடர்ந்தும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி நீரையும் மண்ணையும் நஞ்சாக்குதல், தொடர்ந்தும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் என்பவற்றை முறையற்ற வகையில் வீசி நீர், நில மாசடைதலுக்கு வழிகோலுதல் என நாங்கள் செய்யும் நாசவேலைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
கடந்த சில தசாப்தங்களாகவே மனிதர்களுக்கு புதுப்புது வியாதிகள் வருகின்றன. இவற்றுள் 75% ஆனவை வெவ்வேறு விலங்குகளில் இருந்தே மனிதர்களுக்குக் பரவியவையாக இருக்கின்றன. இவ்வாறு விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு புதிய புதிய நோய்கள் பரவுவதற்கும் பூமியின் சூழல் தொகுதியில் மனிதர்கள் தொடர்ந்து ஏற்படுத்திவரும் சேதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.
நாம் கடந்த 50 வருடத்தில்தான் இந்த பூமியை மிக அதிகமாக பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். மனிதர்களின் சனத்தொகை 3.7 பில்லியனில் இருந்து 7.8 பில்லியனாக (இரண்டு மடங்கிற்கு அதிகமாக) அதிகரித்துள்ள வேளையில் கடந்த ஐம்பது வருடங்களில் மட்டும் உலகின் காடுகளில் 1/3 பங்கினை நாம் அழித்து விட்டோம். இது போதாதென்று தொடர்ந்தும் கழிவுகளை, குறிப்பாக விரைவில் மக்காத கழிவுகளை அதிகமாக உருவாக்கி மேலும் எமது பூமியை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு மனிதர்கள் தமது பேராசை, சுயநலம், தற்காலிக மகிழ்ச்சி என்பவற்றிற்காக கடந்த ஐம்பது வருடங்களில் மட்டும் உலகில் உள்ள விலங்குகள், பறவைகள், ஊர்வன உட்பட முள்ளந்தண்டுள்ள உயிரினங்களின் 60% வீதமானவற்றை அழித்து விட்டார்கள். அதேபோல மனிதர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் 83% ஆன நன்னீர் உயிரினங்களும் அழிந்து போய்விட்டன.
தற்போது இயற்கை விஞ்ஞானிகள் நாம் வாழும் பூமியில் மண்ணும் விரைவாக வளமிழந்து வருவதாகவும் ஏற்கனவே பூமியின் வளமான மூன்றில் ஒருபகுதி அழிவடைந்து விட்டதாகக் கூறுகிறார்கள். தற்போது மனிதர்கள் தொடர்ந்தும் செய்துவரும் காடழிப்பு, திட்டமிடாத விவசாய நிலப் பயன்பாடு மற்றும் நகராக்கம் என்பவற்றால் எஞ்சியிருக்கும் மூன்றில் இரண்டு பகுதியான வளமான மண் இன்னும் 60 வருடங்களில் முற்றாக அழிவடைந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இன்று பெற்றோர்களாக நிற்கும் எங்களைப் பார்த்து நாங்களே கேட்க வேண்டிய ஒரே கேள்வி: “எமது பிள்ளைகள், அவர்களின் சந்ததிக்கு நாம் எதை சொத்தாக விட்டுச் செல்கிறோம்?” என்பதுதான். உங்களில் பலர் உங்கள் பிள்ளைகளுக்காக வங்கியில் பெரும் தொகைப் பணம் சேமித்திருப்பீர்கள். தங்கமாகக் கூடச் சேமித்து இருப்பீர்கள். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்று மூன்று நான்கு வீடுகளைக் கூட வாங்கி வைத்திருப்பீர்கள். ஆனால் உங்கள் சந்ததி சுவாசிக்க சுத்தமான காற்றும் குடிக்க சுத்தமான நீரும், உண்பதற்கு ஆரோக்கியமான உணவாதாரங்களும் கிடைப்பதற்காக என்ன செய்தீர்கள்? எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் குடிக்க நீரும் சுவாசிக்க சுத்தமான காற்றும் இல்லாவிட்டால் நீங்கள் சேர்த்து வைத்த சொத்தினாலும் கட்டி வைத்த வீடுகளினாலும் ஏதும் பயனுண்டா?
சில ஆண்டுகளுக்கு முன்னரே காற்றின் மாசு காரணமாக நியூ டெல்லி, பீஜிங் போன்ற பெரு நகரங்களில் மக்கள் முகக் கவசம் போட்டுத் திரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை நினைத்துப் பாருங்கள். எதிர்காலத்தில் உங்கள் பேரப்பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைக்கும் முதுகில் ஒட்சிசன் சிலிண்டர்களைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை கூட வரலாம். சுத்தமான காற்றடைத்த பைகள் கடை வீதியெங்கும் விற்பனையாகலாம்.
இன்று சர்வதேச பூமி தினம். இவ் வருட சர்வதேச பூமி தினத்தின் தொனிப்பொருளாக “எமது பூமியில் முதலிடுவோம்” (Invest in our planet) என பூமி தினத்தை வருட வருடம் கொண்டாடும் அமைப்பு அறிவித்துள்ளது. அதன் பொருள் நிலத்தில் முதலிட்டு அங்கிருக்கும் மரங்களையும் இயற்கை அமைப்புகளையும் அழித்துவிட்டு கட்டடங்கள் கட்டி இலாபம் பார்ப்பது அல்ல. மாறாக எமது பூமியை சரிசெய்து நல்ல நிலையில் எமது அடுத்த சந்ததிக்கு வழங்கவேண்டும் என்பதாகும்.
தெரிந்தோ தெரியாமலோ இந்த பூமியை நாசம் செய்ததில் எங்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. எனவே, பூமிக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதிலும் எங்கள் ஒருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
நாங்கள் ஒவ்வொருவருமே தனியாகவும் கூட்டாகவும் செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளன. அவற்றை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
- மரங்களை நடுங்கள். எங்களால் ஆயிரம், இரண்டாயிரம் மரங்களை நட முடியாவிட்டாலும் ஆளுக்குப் இரண்டு மரங்களையாவது நட முயற்சிக்கலாம். அல்லது உங்கள் வீட்டருகில் வீதியோரம் யாராவது நட்ட மரத்தைப் பராமரிக்கலாம்.
- மரங்களை நட முடியாவிட்டாலும் வீட்டில் பூந்தோட்டம் அமைத்து பூச் செடிகளையாவது நட்டு வளருங்கள். அது விவசாயத்தின் தோழர்களான தேனீக்கள், வண்ணத்துப் பூச்சி இனங்கள் அழியாமல் பாதுகாக்க உதவும்.
- உங்கள் ஊரில், வாழும் பிரதேசத்தில் உள்ள சிறிய, பெரிய நீர்நிலைகளை சீரமைத்துப் பராமரியுங்கள்.
- கோடை காலங்களில் உங்கள் வீட்டுக்கருகில் சிறிய நீர்த்தொட்டி அமைத்து சிறிய விலங்குகள், பறவைகள் தாகம் தீர்க்க உதவுங்கள்.
- முடிந்தால் உங்கள் வீட்டில் பழ மரங்கள் நடுங்கள். அவை பல விலங்குகள் மற்றும் பறவைகளின் பசி தீர்க்க உதவும்.
இவற்றையெல்லாம் உங்களால் செய்ய முடியாவிட்டால், குறைந்தது பின்வரும் விடயங்களைச் செய்வதன் மூலமும் எமது பூமித் தாய்க்கு உதவலாம்.
- பிளாஸ்டிக் பாவனையை நிறுத்துங்கள். முடியாவிட்டால் அதன் பாவனையை முடிந்தவரை குறையுங்கள்.
- குப்பைகளைக் கண்டபடி வீசுவதை நிறுத்துங்கள். குப்பைகளைத் தரம் பிரித்து அவற்றுக்கு உரிய தொட்டிகளில் போடுங்கள்.
- உங்களை வீட்டில் சேரும் குப்பைகளை அடிக்கடி எரிக்கும் பழக்கம் இருந்தால் அவற்றை நிறுத்துங்கள். உக்கக்கூடிய குப்பைகளை உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு பசளையாக மாற்றுங்கள்.
- தேவைக்கு அதிகமாக நுகர்வுப் பொருட்களை வாங்காதீர்கள். திட்டமிட்டு வாழப் பழகுங்கள்.
- காட்டில் வாழவேண்டிய பறவைகள், விலங்குகளை வளர்ப்புப் பிராணியாக வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அவற்றின் இனம் அழிவதற்குத் துணை போகாதீர்கள்.
- 2 – 3 வருடத்துக்கு ஒருமுறை பொருட்களை மாற்றும் பழக்கம் இருந்தால் அதைத் தயவுசெய்து குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு பொருளை வாங்கினால் அதன் உச்ச பலனைப் பெறுவதுதான் சிறந்த நுகர்வுப் பண்பாக இருக்க முடியும்.
- குறுந்தூரப் பயணங்களுக்கு ( 2 km க்கு குறைவானவை) துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துங்கள் அல்லது நடந்து செல்லுங்கள்.
இது எமது பூமி. இதுதான் எங்களின் வீடு. நாம் வாழுவதற்கு தேவையான அனைத்தையும் இங்கேயே பெற்றுக் கொண்டோம். நாம் செய்த சேதங்களை நாங்கள்தான் சரிசெய்ய வேண்டும். எங்கள் வீட்டைக் கொளுத்திவிட்டு ஓடிப் போய்க் குடியிருக்க எங்களுக்கு வேறு வீடு கிடையாது. நாம் நினைத்தால் இதனைச் சரி செய்ய முடியும். எங்களை ஒவ்வொருவரும் செய்யக்கூடிய விதத்தில் எங்கள் பங்களிப்பை வழங்குவோம்.
எழுதுவது : மணிவண்ணன் மகாதேவா – கனடா