பூமி தினத்தன்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தன்னைத் தீக்கிரையாக்கிக்கொண்டார் ஒருவர்.
ஐம்பது வயதான சூழல் பேணும் இயக்கத்தைச் சேர்ந்த வில் அலன் புரூஸ் என்பவர் வெள்ளியன்று மாலையில் தனக்குத் தீவைத்துக்கொண்டார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தனது நிலைப்பாட்டைக் காட்டிக்கொண்ட அவரது கடைசி சமூகவலைத்தளப் பதிவில், “இது ஒன்றும் நகைச்சுவையல்ல. இது சுவாசிப்பதைப் பற்றியது. சுத்தமான காற்று முக்கியமானது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
கொலராடோவின் பௌல்டர் நகரைச் சேர்ந்த அலன் புரூஸ் ஒரு படப்பிடிப்பாளராகும். பௌத்த மதத்தில் ஈடுபாடு கொண்ட அவர் அந்த நகரின் ஷம்பாலா கோவில் அங்கத்துவராகும். புவியின் நாள் கொண்டாடப்படும் ஏப்ரல் 22 ம் திகதியன்று தன் மீது தீவைத்துக்கொண்ட அவரை உடனடியாக அவசர சிகிச்சைக்கு ஹெலிகொப்டரில் எடுத்துச் சென்றும் காப்பாற்ற முடியவில்லை. அதற்கடுத்த நாளே அவரது உயிர் பிரிந்தது.
Thich Nhat Hạnh அல்லது தாய் என்றழைக்கப்படும் மைண்ட்புல்னஸ் கோட்பாட்டை உண்டாக்கிய வியட்நாமிய புத்த பிக்குவின் வரிகளை அலன் புரூஸ் செய்துகொண்ட நடவடிக்கைக்குக் காரணமாகக் காட்டுகிறார் அவரது கோவில் குருவானவர். 1960 ம் ஆண்டுப்பகுதியில் நடந்த வியட்நாம் போரின்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தங்களை எரித்துக்கொண்டவர்களை அவர் உதாரணமாகக் காட்டுகிறார்.
“தன்னைத்தானே எரித்துக்கொள்வதன் மூலம் தனது திடமான நிலைப்பாட்டைக் காட்டுவது அழிப்புச் செயலல்ல, ஆக்கச் செயலாகும். தனது மக்களுக்காகத் தன்னைத் துன்புறுத்தி இறப்பைத் தழுவுவதாகும்,” என்கிறது Thich Nhat Hạnh வரிகள்.
சாள்ஸ் ஜெ. போமன்