நைஜீரியாவின் அனுமதியில்லாத எண்ணெய்க்கிணற்று விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 110.
வெள்ளியன்று மாலை நைஜீரியாவில் அனுமதியின்றி இயங்கும் எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட தீப்பரவலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 110 ஐ எட்டிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. நாட்டின் தேசிய அழிவு என்று ஜனாதிபதி முஹம்மது புஹாரி குறிப்பிட்டிருக்கிறார். விபத்துப் பற்றி வெள்ளியன்றே செய்திகள் வெளிவர ஆரம்பித்திருந்தாலும் கூட அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளின் அளவு இன்றுதான் வெளியாகிறது.
நைஜீரியாவின் தெற்குப் பகுதியிலிருக்கும் விபத்து நடந்த இடம் காட்டுக்குள்ளிருக்கிறது. தீவிபத்து ஏற்பட்டு வெடித்ததால் அதையடுத்து இருந்த வீடுகள், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெடித்து அதற்குள் சிதறிய மனித உறுப்புகள் நீண்ட தூரம் வரை சிதறியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததாக சாட்சிகள் குறிப்பிடுகிறார்கள். தீவிபத்திலிருந்து தப்பியோட முயன்ற பலரின் உடல்கள் எரிந்துபோய் அடையாளம் காண முடியாத நிலையிலிருக்கின்றன.
ஆபிரிக்காவின் எரிநெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு நைஜீரியா. அங்கு நிலவும் அரசியல் பிரச்சினைகளால் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு மையங்களுக்குக் குளாய்கள் மூலம் அனுப்பப்படும் எண்ணெய் பல இடங்களிலும் திருடப்படுகிறது. அதைத் தவிரக் களவாக எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுபவர்களும் உண்டு. திருட்டு எண்ணெய் பாதுகாப்பில்லாத மையங்களில் களவாகச் சுத்திகரிக்கப்படுகிறது. எனவே, எரிநெய் உற்பத்தியைச் சுற்றியுள்ள விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன.
நடந்த விபத்தின் பின்று நைஜீரியாவில் களவாக எண்ணெய் எடுப்பவர்கள், சுத்திகரிப்பவர்களை வேட்டையாடிக் கைதுசெய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார் ஜனாதிபது புஹாரி. 30 விகிதத்தினருக்கும் அதிகமானோர் வேலையில்லாதவர்களாக இருக்கும் நைஜீரியாவில் வறுமை தலைவிரித்தாடுகிறது. எனவே அதிகாரிகளுக்கு இப்படியான திருடர்களைப் பிடிக்கும் சந்தர்ப்பம் மிகக் குறைவு என்றே கருதப்படுகிறது. பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான எண்ணெய் வருடாவரும் திருட்டுத்தனமாக கறுப்புச்சந்தையில் விற்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்