கட்டட நிர்மாணத் துறையின் தொழிலாளர்கள் பலர் வேலையிழப்பு
அதிகரித்து வரும் சீமெந்து விலையினால் கட்டிட நிர்மாணத்துறை வேலைகள் படுவீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் கட்டிட தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அதேவேளை சீமெந்து விலையை கட்டுப்படுத்தக்கோரும் கட்டிட நிர்மாண நிறுவனங்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டும் வருகின்றன.அதனடிப்படையில் பல நிர்மாண வேலைகளை நிறுத்தி வருகின்றன. இதனால் கட்டிட நிர்மாணத்துறை தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்தின் விலை கூட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலைகளோடு ஒப்பிட்டு நிர்ணயம் செய்யப்படுவதும், வற்வரியின் அதிகரிப்பும் இணைந்து இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பை பொதுமக்கள் தரப்பில் வெளியிட வேண்டும் என இலங்கை தேசிய கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு உள்ளூர் உற்பத்தி சீமெந்துகளுக்கு முக்கியத்துவம் வழங்கினால் விலையேற்றத்திற்கு முற்றுபுள்ளி வைக்கலாம் என்றும் நியாய விலைக்கு இலகுவில் கிடைக்கும் என்றும் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
ஒட்டுமொத்தத்தில் கட்டிட தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் என்பது பலரின் பஞ்சத்துக்கு வழிகோலும் என பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
எழுதுவது : யோதிகுமார்