லாஸ் ஏஞ்சல்ஸில் ஆரம்பமாகிறது ஒன்பதாவது, “அமெரிக்கா” [Summit of the Americas]மாநாடு.
அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பல பிரச்சினைகளை எதிர்கொண்ட அமெரிக்காக் கண்டத்து நாடுகளுக்கான மாநாடு இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கவேண்டும் என்பது எண்ணம். ஆனால், சில நாடுகள் அழைக்கப்படவில்லை அதனால் மற்றும் சில நாடுகள் புறக்கணிப்புச் செய்கின்றன.
கியூபா, நிக்காராகுவா, வெனிசுவேலா ஆகிய நாடுகளை இந்த மாநாட்டுக்கு அழைக்க ஜனாதிபதி ஜோ பைடன் மறுத்துவிட்டார். ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இணங்கி நடக்காத நாடுகளுக்கு அங்கே இடமில்லை என்று அவர் தெரிவித்ததே அதற்குக் காரணம். 1994 ம் ஆண்டிலிருந்து சுமார் 3 வருடங்களுக்கொருமுறை நடக்கும் இந்தச் சந்திப்பில் அந்த மூன்று நாடுகளும் கலந்துகொள்ள அழைக்கப்படுவதில்லை. இவ்வருடம் அதைக் காரணம் காட்டி எல்லை நாடான மெக்ஸிகோவின் ஜனாதிபதி தான் அதில் பங்குபற்றப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டார்.
மெக்ஸிகோ ஜனாதிபதி பங்குபற்றாததைத் தொடர்ந்து சில கரீபியப் பிராந்தியத் தலைவர்களும் பங்குபற்றவில்லை. ஆர்ஜென்ரீனா, பிரேசில் நாட்டின் தலைவர்களும் முதலில் பங்குபற்ற மறுத்தாலும் சமீப வாரங்களில் மனம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மெக்ஸிகோவின் புறக்கணிப்பு இந்தச் சந்திப்பைப் பலவீனமாக்குவதாகக் கருதப்படுகிறது.
இந்த மாநாட்டின்போது பங்குபற்றும் நாடுகளில் அமெரிக்கா மீண்டும் உதவித்திட்டங்களில் பங்குபற்றத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்படவிருக்கிறது. அதன் காரணம் சமீப வருடங்களில் அப்பகுதிகளில் இருக்கும் நாடுகளில் சீனா பல உதவித்திட்டங்களை அறிவித்து நாடுகளுக்குக் கடன்களையும் கொடுப்பதாக அறிவித்திருப்பதாகும். தனது பிராந்தியத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சீனா காலூன்றுவதைத் தடுக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளாகியிருக்கிறது அமெரிக்கா.
சாள்ஸ் ஜெ. போமன்