ஸ்பெயினுக்குப் பெற்றோர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது பிறந்த குழந்தைக்கு குடியுரிமை.
அகதிகளாக ஐரோப்பாவை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை ஒன்றுக்குக் குடியுரிமை கொடுக்கவேண்டும் என்று ஸ்பெய்ன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஸ்பெய்ன் சட்டப்படி நாட்டில் பெற்றோர் மூலம் அல்லது ஸ்பானிஷ்காரரைக் கல்யாணம் செய்து வாழ்ந்திருந்தால் தான் குடியுரிமை கொடுக்கப்படும். இல்லையேல் பத்து வருடங்கள் ஸ்பெய்னில் வாழ்ந்திருக்கவேண்டும்.
கமரூனைச் சேர்ந்த தம்பதியர் மொரொக்கோவுக்கு வந்து அங்கிருந்து ஸ்பெய்னுக்கு அகதிகளாக 2018 இல் வந்தார்கள். மொரொக்கோவில் காத்திருக்கும்போது அக்குழந்தை பிறந்தது. எனவே பெற்றோர் போன்று குழந்தைக்கு எந்த நாட்டுக் குடியுரிமையும் கிடைக்கவில்லை, நாடற்றவராக ஸ்பெய்னுக்குப் பெற்றோருடன் அக்குழந்தை வந்தது.
நாடற்ற நிலைமையால் ஸ்பெய்னில் அக்குழந்தைக்கு மருத்துவ சேவை, கல்வி ஆகியவை மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அக்குழந்தை தமது வயதுடைய மற்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கும் உரிமைகளைப் பெறவில்லை என்று சுட்டிக்காட்டி Guipúzcoa நீதிமன்றம் அக்குழந்தைக்கு ஸ்பானிஷ் குடியுரிமை வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
இதேபோன்ற முடிவை இதற்கு முன்னரும் ஸ்பெய்ன் நீதிமன்றமொன்று 2021 இல் வழங்கியிருக்கிறது. நாட்டின் அரசு நீதிமன்ற முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்திருக்கிறது. எனவே குறிப்பிட்ட முடிவை நாட்டின் உச்ச நீதிமன்றம் எதிர்த்து முடிவெடுக்கும் சாத்தியமுண்டு.
கடந்த வருடம் 40,000 பேர் ஸ்பெய்னுக்குள் கடல் மூலமாக நுழைந்து அகதிகளாக விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். அத்தொகை இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 12 % ஆல் அதிகரித்திருக்கிறது. கடலால் ஸ்பெய்னுக்குள் நுழைய முயற்சித்து இறந்தவர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தில் 4.404 என்று மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன. அது அதற்கு முந்தைய வருடத்தை விட இரண்டு மடங்காகும்.
சாள்ஸ் ஜெ. போமன்