“அமெரிக்க பாராளுமன்றம் தாக்கப்படுவதை நிறுத்த டிரம்ப் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.”
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வெளிவந்து ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனவரி 06 இல் பாராளுமன்றத்தைக் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் கலவரக்காரர்கள் தாக்கியது தெரிந்ததே. அதன் பின்னணி பற்றிச் சுமார் ஒரு வருடமாக அமெரிக்கப் பாராளுமன்றத்தினால் விசாரிக்கப்பட்ட விபரங்கள் ஒரு நேரடித் தொலைக்காட்சி விசாரணையில் வெளியிடப்பட்டு வருகிறது..
வியாழக்கிழமையன்று ஆரம்பமாகிய தொலைக்காட்சியில் காணக்கூடிய நேரடி விசாரணைகளின்போது, ‘அன்றைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அக்கலவரத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் எதையும் எடுப்பதைத் தவிர்த்தார்,’ என்று குறிப்பிடுகிறது. தொடர்ந்து வெளியிடப்படவிருக்கும் விபரங்கள் ஜனவரி 06, 2020 இல் நடத்தப்பட்ட அக்கலவரங்கள் வெளியாகிய தேர்தல் முடிவுகளை மாற்றித் தன்னையே வெற்றிபெற்றதாகக் காட்ட டொனால்ட் டிரம்ப் போட்டிருந்த திட்டங்களின் ஒரு பகுதியே என்று காட்டவிருப்பதாக விசாரணைக்குழு தெரிவிக்கிறது.
விசாரணைக் குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான ரிப்பப்ளிகன் கட்சியைச் சேர்ந்த லிஸ் சேனி டொனால்ட் டிரம்ப் வகுத்திருந்த ஏழு படித் திட்டங்களில் ஒன்றே 06 கலவரங்கள் என்பதைத் தான் காட்டவிருப்பதாகத் தெரிவித்தார். டிரம்ப்பின் முக்கிய அரசியல் விமர்சகரான அவர் டிரம்ப் தன்னுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர்கள் கேட்டுக்கொண்டும் கூட அக்கலவரத்தைத் தடுக்கும் முயற்சிகளை எடுக்க மறுத்ததை விசாரணைகளின் விபரங்கள் மூலம் வெளிப்படுத்துவதாக உறுதி கூறினார்.
கலவரத்தை அடக்குவதற்குப் பிரத்தியேக பாதுகாப்புப் படையை அனுப்ப டிரம்ப் மறுத்துவிட்டார். பதிலாக, கலவரக்காரர்களை ஊக்குவிக்கும் பதிவுகளை டுவிட்டரில் எழுத அதைக் கலவரக்காரர்கள் தமது நடவடிக்கையின்போது உரத்து வாசித்தார்கள். அவர்கள் உப ஜனாதிபதி மைக் பென்ஸைத் தூக்கிலிடவேண்டும் என்று கூச்சலிட்டார்கள். அதை அறிந்த டிரம்ப், “அவர்கள் சொல்வது ஒருவேளை சரியானதே,” என்று தன் உதவியாளர்கள் முன்னர் குறிப்பிட்டார்.
டிரம்ப்பின் நீதியமைச்சர் விசாரணையில், “தேர்தல் முடிவுகள் முழுப் பொய்” என்பதே டிரம்ப்பின் நிச்சயமான முடிவு. எங்கள் நாடு பெரும் அழிவின் பிடியிலிருக்கிறது. கலவரக்காரர்களை அடக்குங்கள் என்று கேட்டுக்கொண்டேன்,” என்று சாட்சியமளித்தார். டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் தான் நீதியமைச்சரின் முடிவை ஆதரித்ததாகக் குறிப்பிட்டார்.
விசாரணைக் குழுவின் முடிவுகளும், விபரங்களும் தொடர்ந்து வெளியாகைவிருக்கின்றன. அந்த விசாரணைக்குழு டிர்ம்ப்பைக் குறிவைத்துத் தாக்கும் அரசியல் நாடகமே என்று ரிபப்ளிகன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டு வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்