தான்சானியாவில் எரிவாயு தயாரிக்கவிருக்கின்றன பிரிட்டிஷ், நோர்வே நிறுவனங்கள்.
ஆபிரிக்காவின் கிழக்குக் கரையில் நீண்ட எல்லையைக் கொண்ட நாடு தான்சானியா. பிரிட்டிஷ் நிறுவனமான ஷெல்லும், நோர்வீஜிய நிறுவனமான எக்கியுனூரும் அங்கே திரவ எரிவாயுவைத் தயாரிக்கும் மையங்களை தயாரிப்பதாகத் திட்டமிட்டிருக்கின்றன. முதலீடு பற்றிய கடைசி முடிவுகள் 2025 இல் எடுக்கப்படும் என்று தான்சானிய அரசு தெரிவித்தது.
லுக்குலேடி ஆறு கடலில் சேரும் நகரான லிண்டியில் இருக்கும் துறைமுகத்திலிருந்து திரவ எரிவாயு மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த மையம் 2029 -2030 ஆண்டளவில் செயற்பட ஆரம்பிக்கும் என்று எரிசக்தி அமைச்சர் ஜனவரி மக்காம்பா தெரிவித்தார். திட்டத்தின் முதற் கட்ட ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது நடந்த வைபவத்தில் நாட்டின் ஜனாதிபதி சமியா சுலுகு ஹாசனும் பங்கெடுத்தார்.
“திரவ எரிவாயு எடுக்கும் திட்டத்தைப் பற்றிய முக்கிய பேச்சுவார்த்தைகள் முடிந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து மேலும் பல ஆயத்தங்களும், பேச்சுவார்த்தைகளும் காத்திருக்கின்றன,” என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி. அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த ஜோன் மங்குபுலியில் காலத்திலிருந்தே இதுபற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களைத் தவிர்த்துவந்த இந்தத் திட்டத்தை முன்னேற விடாமல் இழுத்தடித்து வந்திருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்