மக்ரோன் கூட்டணி பிரான்ஸ் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வார்களா?
சில வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தவணையும் வெண்று ஆட்சியைக் கைப்பற்றிய மக்ரோனுக்குச் சவால் விடும் நிலைமையை உண்டாக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்கள் ஞாயிறன்று ஆரம்பித்திருக்கின்றன. அந்த முதல் கட்டத் தேர்தல் முடிவுகளிலிருந்து மக்ரோனின் கூட்டணி பாராளுமன்றத்தில் ஆள்வதற்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றும் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
மக்ரோன் அறிவித்திருந்த அரசியல் முடிவுகளை வரும் ஐந்து வருடங்களில் எடுக்க அவரது கட்சிக்குப் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை தேவை. அதற்காக அவர்கள் 577 மொத்த இடங்களில் 289 ஐக் கைப்பற்றவேண்டும். வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளிலிருந்து மக்ரோன் கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான NUPES bloc இடையே ஒரு சத விகித வாக்குகளுக்கும் குறைவான இடைவெளியே இருக்கிறது.
மக்ரோனின் மேலுமொரு காட்டமான விமர்சகரான வலதுசாரிக் கூட்டணியினர் மூன்றாவது இடத்திலேயே இருக்கின்றனர். முதலிரண்டு இடங்களிலுமிருக்கும் மக்ரோன் கட்சியினரும், இடதுசாரிக் கூட்டணியினரும் சுமார் 25 – 26 % வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். லி பென் தலைமையிலான வலதுசாரிகளால் 16.68 % வாக்குகளையே பெற முடிந்திருக்கிறது.
தேர்தலின் மூலம் வெளியாகியிருக்கும் மேலுமொரு கசப்பான விடயம் எந்த ஒரு கட்சியும் மக்களில் பெரும்பான்மையினரை ஈர்க்கவில்லை என்பதே. வாக்களிக்காதவர்களின் விகிதம் 52.49 ஆகும். எனவே தேர்தலின் அடுத்த கட்டமான இவ்வார இறுதியில் மேலும் அதிக வாக்காளர்களைத் தேர்தல் சாவடிகளுக்கு இழுக்க இடதுசாரிகளின் கூட்டணியினர் தமது வாக்கு வேட்டைகளை அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்ரோன் கூட்டணியினர் வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளின் திட்டமாக ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 65 ஆக அதிகரிக்கவும், வருமான வரிகளைக் குறைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இடதுசாரிகளின் அணியினர் ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைக்கவும், எரிபொருள் விலைகள் ஏற்றமடையாமல் முற்றுப்புள்ளி வைக்கவும், அடிமட்ட ஊதியத்தை உயர்த்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
மயிரிழை வித்தியாசத்தில் இருக்கும் முதலிரண்டு கூட்டணியினருக்கிடையில் இடதுசாரிகள் வெல்லவேண்டுமானால் அவர்கள் மிகப் பெரிய அளவில் இளமையான வாக்காளர்களைச் சாவடிகளுக்கு அடுத்த கட்டத்தில் வாக்களிக்க ஈர்க்கவேண்டுமென்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்