கடந்த வருடங்களில் உலகில் அகதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது.
உலகின் வெவ்வேறு பாகங்களில் தற்போது அகதிகளாகப் புலம்பெயர்ந்திருப்போரின் எண்ணிக்கை 100 மில்லியன்களை விட அதிகமாகும். உக்ரேன் போர் ஆரம்பிக்க முன்னரேயே 90 மில்லியனாக இருந்தது அவ்வெண்ணிக்கை. இது 2012 இல் உலக அகதிகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும்.
2012 இன் பின்னர் வருடாவருடம் அகதிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வந்திருக்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில் ஒரு விகிதத்துக்கும் அதிகமானோர் வெவ்வேறு சச்சரவுகளால் அகதிகளாக மாறியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கு உதவும் அமைப்பின் அறிக்கையில் காணக்கிடக்கிறது.
பெரும்பாலான அகதிகள் தமது நாடுகளின் பாதுகாப்பான இடங்களிலும் தமது பக்கத்து நாடுகளிலும் புகலிடம் தேடியிருக்கிறார்கள். 83 % விகிதமான அகதிகள் வறிய நாடுகளிலும், ஓரளவும் முன்னேறி வரும் நாடுகளிலும் இருக்கிறார்கள்.
உக்ரேன் தவிர தென் சூடான், மியான்மார், ஆப்கானிஸ்தான், சிரியா, ஆகிய நாடுகளிலிருந்து பலர் சமீப வருடங்களில் அகதிகளாகியிருக்கிறார்கள். ஆயுதப் போர்கள் தவிர, பஞ்சம், காலநிலை மாற்றம், பொருளாதார வீழ்ச்சி ஆகியவையும் பலரை அகதிகளாக்கியிருக்கிறது. இந்த நிலைமையை எதிர்கொள்ள உலக நாடுகள் மேலும் ஒன்று சேர்ந்து கூட்டுறவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கிறது ஐ.நா.
சாள்ஸ் ஜெ.போமன்