டென்மார்க்கில் ஜனநாயக விழா நடக்கும் சமயத்தில் நாட்டின் கடற்பகுதியில் தோன்றிய ரஷ்ய போர்க்கப்பல்.
ரஷ்யாவின் போர்க்கப்பல் இரண்டு தடவைகள் அத்துமீறி டென்மார்க்கின் கடற்பிராந்தியத்துக்குள் நுழைந்து திரும்பியதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியிருக்கிறது. டென்மார்க்கின் போர்ன்ஹோல்ம் பகுதியில் நடந்துவரும் ஜனநாயக விழாவின் சமயத்திலேயே குறிப்பிட்ட கப்பல் இரண்டு தடவை கவனிக்கப்பட்டிருப்பதால் டென்மார்க்கின் ரஷ்யத் தூதுவரை வரவழைத்துத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது டென்மார்க் அரசு.
வெள்ளியன்று நள்ளிரவையடுத்தே corvette என்ற வகையிலான அந்தச் சிறிய போர்க்கப்பல் இரண்டு தடவை போர்ன்ஹோல்ம் பகுதியில் கவனிக்கப்பட்டிருப்பதாக டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. குறிப்பிட்ட வகையான போர்க்கப்பல்கள் உளவுபார்த்தல், கடத்தல் போன்றவைக்காகப் பாவிக்கப்படுவது வழக்கம்.
“இது ரஷ்யா வேண்டுமென்றே செய்யும் அத்துமீறல். எமது நாட்டில் ஜனநாயகத்தைக் கொண்டாடும் விழாவில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் ரஷ்யா செய்வது பண்பாடற்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என்று அறிக்கை விட்டிருக்கிறார் டென்மார்க்கின் வெளிவிவகார அமைச்சர்.
சாள்ஸ் ஜெ. போமன்