கவிநடைபதிவுகள்

பிரளயத்தை உருவாக்கும் மகா சக்தி நீ…

எழுதுகோல்தான்
ஈட்டிகளாய் பாய்ந்திருக்கிறது!
எழுத்துகள்தான்
அனுகுண்டுகளாய்
வெடித்திருக்கிறது!

ருஷிய புரட்சியில் தொடங்கி
இந்திய விடுதலை வரை
இதுவே
சாட்சியமாகியுள்ளது!

எழுதுகோலே
செங்கோலாய்
மாறியிருக்கிறது!
எழுத்துகளே
வேதமாய் காட்சியாகியுள்ளது!

அகத்தியனில்
தொடங்கி
அறியப்பட்ட
வரலாறு இது!

எழுதுகோல்
எழுதுவோனின் ஆயுதமாய்…
எழுத்துகள்
புரட்சிக்குரிய விதைகளாய்…

பிரகடனப் பட்டுள்ளது
அதர்மங்களின் அரசாட்சியில்!

எழுதுவோன் இறைவனாய்…
எழுத்துகள் வரமாய்…

நிரூபணப்பட்டுள்ளது
பாரதியிடம்!

எழுதுகோல்
பூமியை சமன்படுத்தும்
ஏர்முனையாய்…
எழுத்துகள்
நேய விதைகளாய்…

காட்சியாகி உள்ளது
வள்ளலாரிடம்!

எழுத்தும்
எழுதுகோலும்
ஆட்சியையும்
மாற்றம் செய்யும்…

சாட்சியாகி உள்ளது
பட்டுக்கோட்டையிடம்!

எழுதுகோலும்
எழுத்துகளும்
தத்துவத்தின்
மூலம்…

உண்மையாகி உள்ளது
காரல் மார்க்சிடம்!

எழுத்துகள்
அரசியலின் பிறப்பிடம்…

ஆதாரம் ஆகியுள்ளது
அரிஸ்டாட்டிலிடம்!

நண்பனே…
அந்த எழுதுகோல்
இன்று
உன்னிடமும்!

என்ன செய்யப்போகிறாய்
யோசி!

உன்
எழுதுகோல்
உலகை உலுக்கும்!
அதர்மத்தை வேரறுக்கும்!
கோழைகளை வீரனாக்கும்!
கொடுங்கோன்மைக்கும்
முடிவு கட்டும்!

சுய அரிப்புகளுக்காக
சொறிந்து கொண்டிருப்பதை
இன்றுடன் விடு!

பிரளயத்தை உருவாக்கும்
மகா சக்தியாக நீயே
வெளிப்படு!

எழுதுவது : பாரதிசுகுமாரன்,சென்னை , தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *