தனது ஆபிரிக்க விஜயங்களைச் சுகவீனம் காரணமாக நிறுத்திய பாப்பாண்டவரின் அடுத்த நகர்வு என்ன?
சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாகத் தள்ளும் நாற்காலியில் உலாவ ஆரம்பித்திருக்கிறார் பாப்பாண்டவர் பிரான்சீஸ். கொங்கோ குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளுக்கான தனது ஜூலை மாத விஜயத்தையும் அவர் தற்காலிகமாக ரத்து செய்திருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக விடுமுறை மாதமான ஆகஸ்டில் அதிமேற்றாணியார்களை நியமிக்கும் ஒரு மாநாட்டையும் கூட்டியிருக்கிறார். இந்த நடவடிக்கைகளால் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்கக்கூடுமா என்ற கேள்வி கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்டத்தினரிடையே எழுந்திருக்கிறது.
2013 ம் ஆண்டு வரையில் பதவியேறிய பாப்பரசர் ஒருவர் ஓய்வு பெறுவது என்பது நடக்காத காரியம் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. அதை மாற்றியவர் அவ்வருடத்தில் தனது உடல்நிலை மோசமானதால் பதவி விலகிய பாப்பரசர் பெனடிக்ட் XVI ஆகும். 95 வயதாகிய அவர் தற்போது ஓய்வுபெற்றவராக வாழ்ந்து வருகிறார். அவருக்குப் பின்னர் பதவியேற்ற பிரான்சீஸ் தனது உடல்நலம் தான் செய்ய வேண்டிய் கடமைகளுக்கு இடையூறாக இருப்பின் தான் ஓய்வு பெறுவேனென்று குறிப்பிட்டிருந்தார்.
சிறுவயதிலேயே உடல்நலக் குறைவால் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சையொன்று பிரான்சீஸின் சுவாசப்பையின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. சமீபத்தில் அவர் தனது முளங்காலில் ஏற்பட்டிருக்கும் உபாதையொன்றால் அவதிக்குள்ளாகியிருக்கிறார். அதைத் தவிர தனது இடுப்பு மூட்டிலும் அவருக்குப் பிரச்சினையிருக்கிறது.
ஜூலை மாதத்தில் அவர் கனடாவுக்கு செய்யவிருக்கும் பயணத்திட்டத்திலிருந்து அவர் பின்வாங்கவில்லை. அத்துடன் வரவிருக்கும் வாரங்களில் நடக்கவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர் கலந்துகொள்ளவிருப்பதாகவே தெரிகிறது.
ஆகஸ்ட் 27 ம் திகதி நடக்கவிருக்கும் அதிமேற்றாணியார்கள் [கார்டினல்] நியமித்தல் நிகழ்வில் அவர் 21 புதியவர்களை நியமிப்பார். அவர்களில் 16 பேர் 80 வயதுக்குக் குறைவானவர்களாக இருப்பார்கள். தனது சேவைக்காலத்தில் இதுவரை அவர் 83 அதிமேற்றிராணியார்களை நியமித்திருக்கிறார். ஐரோப்பியர்களால் நீண்ட காலமாகப் பெரும் ஆதிக்கம் பெற்றிருந்த திருச்சபையை சர்வதேசமயமாக்குவதும் அவருடைய திட்டங்களில் ஒன்றாகும்.
கார்டினல்களை நியமித்த அடுத்த நாள் அவர் 13 ம் நூற்றாண்டில் மறைந்த பாப்பரசர் செலஸ்தீன் V இன் சமாதிக்கு விஜயம் செய்யவிருக்கிறார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற முதல் பாப்பரசர் செலஸ்தீன் V ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்