கொலம்பியாவுக்கு முதலாவது இடதுசாரி ஜனாதிபதியும், ஆபிரிக்க – கொலம்பிய உப ஜனாதிபதியும் ஒரே தேர்தலில்.
கொலம்பியா வாக்காளர்கள் தமது ஜனாதிபதியாக ஒரு இடதுசாரிப் போராளியைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். முதல் தடவையாக நாட்டுக்கு ஒரு இடதுசாரித் தலைவர் கிடைத்திருக்கும் அதே சமயத்தில் நாட்டின் உப ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பவரும் சரித்திரம் படைத்திருக்கிறார். பெண்ணியவாதியான பிரான்சியா மார்க்கே நாட்டின் முதலாவது கருப்பின உப ஜனாதிபதியாகியிருக்கிறார்.
ஞாயிறன்று நடந்த இரண்டாவது கட்ட வாக்கெடுப்பில் இடதுசாரி வேட்பாளர் குஸ்தாவோ பெத்ரோ எதிர் தரப்பில் நின்ற வலதுசாரி வேட்பாளர் ரொடால்போ ஹெர்னாண்டஸை வீழ்த்தி வெற்றிபெற்றார். 62 வயதான பெத்ரோ முன்று ஒரு ஆயுதப்போராளியாக இருந்தவராகும். மூன்றாவது தடவையாக ஜனாதிபதி வேட்பாளராக நின்ற அவர் நாட்டின் தலைநகரான பொகோத்தாவின் ஆளுனராக இருந்தவராகும்.
இடதுசாரிக் கோட்பாட்டுடனான பல மாற்றங்களை கொலம்பிய மக்களுக்குத் தரவிருப்பதாக அவர் உறுதி கூறினார். 40 % கொலம்பியர்கள் ஏதாவது ஒரு வகையில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களாகும். நாட்டின் புதிய வாக்காளர்களில் பெரும்பாலானோர் சமூகத்தில் மாற்றம் வேண்டி பெத்ரோவைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
உப ஜனாதிபதியாக வென்றிருக்கும் பிரான்சியா மார்க்கே நாட்டின் சுமார் 10 % கறுப்பின மக்களில் ஒருவராகும். அவர் பெண்ணியவாதி மட்டுமன்றி சூழல் பேணும் அமைப்பில் பெரும் ஈடுபாடு உள்ளவராகும். போதைப் பொருட்கள், கடத்தல்கள், ஆயுதப் போர் புரியும் குழுக்களின் ஆக்கிரமிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு கொலம்பியா. தேர்தல் காலத்தில் பல தடவைகள் மார்க்கேயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.
“எமக்கு முன்னாலிருக்கும் முதலாவது சவால் எம்மிடையே ஏற்பட்டிருக்கும் பிரிவினைகளை மறந்து ஒன்றுபடுவதாகும். அமைதியும் சமத்துவமுமே எங்கள் நாட்டை முன்னேற்ற முடியும்,” என்கிறார் மார்க்கே.
பதவியிலிருக்கும் ஜனாதிபதியைக் கொலம்பிய மக்கள் பெருமளவில் வெறுக்கிறார்கள். வறுமையும், குற்றங்களும், பணவீக்கமும் நாட்டை மோசமாகப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்குக் காரணம் பதவியிலிருந்து விலகப்போகும் இவான் டுக்கே என்று மக்கள் கருதுகிறார்கள்.
1900-ம் ஆண்டுகளில் ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் கொல்லப்பட்ட நாடு கொலம்பியா. தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் நாடெங்கும் சுமார் 320,000 இராணுவத்தினரும், பொலீசாரும் பாதுகாப்புக்காக வீதிகளில் தயாராக இருந்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்