உக்ரேன் குழந்தைகளுக்காகத் தன் நோபல் பரிசை விற்றுச் சாதனை படைத்த ரஷ்யப் பத்திரிகையாளர்.

2021 இல் தான் பெற்ற நோபல் பரிசுப் பதக்கத்தை உக்ரேன் அகதிக் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உதவுவதற்காக ஏலத்தில் விட்டார் ரஷ்யப் பத்திரிகையாளரான டிமித்ரி முரட்டோவ். அவரது நோபல் தங்கப் பதக்கம் விற்பனையில் 103.5 மில்லியன் டொலர்களைச் சம்பாதித்துச் சாதனை படைத்தது. திங்களன்று உலக அகதிகள் தினத்தன்று அவர் அதை Heritage Auctions நிறுவனம் மூலம் விற்றார்.

இதற்கு முன்னர் தான் மரபணுக்கணின் அமைப்புகளைக் கண்டுபிடித்ததுக்காக 1962 இல் பெற்ற நோபல் பதக்கத்தை 2014 இல் விற்றார் ஜேம்ஸ் வட்சன். அவருடைய பதக்கம் சுமார் 4.76 மில்லியன் டொலர்களை ஈட்டியது. வட்சனுடன் சேர்ந்து நோபல் பரிசு பெற்ற பிரான்சிஸ் கிரிக் தனது பதக்கத்தை 2017 இல் ஏலம் விட்டபோது அவருக்கு 2.27 மில்லியன் டொலர்கள் மட்டுமே கிடைத்தது.

யுனிசெப் [ UNICEF]அமைப்புக்கு முரட்டோவின் பதக்கம் விற்கப்பட்ட தொகை உக்ரேன் அகதிக் குழந்தைகளுக்கு உதவுவதற்காகக் கையளிக்கப்படும். அத்தொகையுடன் மேலும் 500,000 டொலர்களை முரட்டோவ் இணைத்திருக்கிறார். தனது உதவி அந்தக் குழந்தைகளுடைய வாழ்வுக்கு ஒரு துளியாவது உதவும் என்கிறார் அவர்.

175 கிராம் எடையுள்ள அந்த 23 காரட் தங்கப் பதக்கத்தை உருக்கினால் அதன் பெறுமதி 10,000 டொலர் ஆகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *