உலகில் ஒரு பில்லியன் சிறுவருக்கு காலநிலை மாறுதலால் பேராபத்து!

இந்தியா உட்பட 33 நாடுகள் அடக்கம்!

குழந்தைகளுக்காகவே வாழ்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அவர்களை ஆபத்தான ஒரு பூமியில் விட்டுச் செல்கின்றோம்.

பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு பில்லியன் சிறுவர்களதுசுகாதாரம், கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றைப் பறித்துவிடப்போகிறது என்று ஐ. நா.சிறுவர் பாதுகாப்பு நிதியம்(Unicef) எச்சரித்துள்ளது.

காலநிலை நெருக்கடியை ஒரு சிறுவர் உரிமைப் பிரச்சினை என்று தொடர்புபடுத்தியிருக்கும் சிறுவர் நிதியம், அதன்விளைவுகள் உலக நாடுகளில் சிறுவர்களை எந்தளவுக்குப் பாதிக்கும் என்ற அளவுச் சுட்டியை வெளியிட்டிருக்கிறது.

பருவநிலையும் சூழல் பாதிப்புகளும்ஏற்படுத்துகின்ற அதிர்ச்சிகள் நேரடியாக சிறுவர்களது வாழ்வுக்கான உரிமைகளையே பாதிக்கின்றன. வெப்பம், புயல்மழை, மாசு என எல்லா வடிவங்களிலும்தோன்றும் சீற்றங்கள் சிறுவர்களுக்கானஅத்தியாவசிய தேவைகளைத் தடுக்கின்றன-என்று சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

அதி உச்ச அளவில் சிறுவர்கள் பாதிக்கப்படவுள்ள நாடுகளின் தர வரிசையில்முதல் இடங்களில் ஆபிரிக்க நாடுகளானமத்திய ஆபிரிக்கக் குடியரசு, சாட், நைஜீரியா ஆகியன உள்ளன. அவற்றுக்குப்பின்னால் இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய தென்னாசிய நாடுகளும் அடங்கியுள்ளன.

மிகவும் அதிகளவு காபன் வெளியேற்றுகின்ற நாடுகளில் ஒன்றான இந்தியாவில் சிறுவர்களது எதிர்காலம் மிக ஆபத்தான திசையில் உள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் உலகளாவிய மதிப்பீட்டு ஆய்வுகளின்படி

-240 மில்லியன் சிறுவர்கள் கடற்கரையோர வெள்ளம் காரணமாகவும், 400 மில்லியன் சிறுவர்கள் புயல்கள் காரணமாகவும், 820 மில்லியன் சிறுவர்கள் வெப்ப அனல் வீச்சினாலும், 920 மில்லியன் சிறுவர்கள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி கிரேட்டா துன்பேர்க்,(Greta Thunberg) காலநிலைப் பாதிப்புகள் மீது உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளிக் கிழமைகள் தோறும் பாடசாலைகளைப் பகிஷ்கரிக்கும் இயக்கத்தை கடந்த 2018 இல் ஆரம்பித்திருந்தார்.அந்த இயக்கம் உலகெங்கும் சிறுவர்கள் மற்றும் இளவயதினரிடையே “எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமை”( Friday for future) என்னும் பெயரில் பிரபலமாகிப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளில் வெள்ளிக்கிழமைகளில்பாடசாலைகளைப் புறக்கணித்து மேற்கொள்ளப்பட்டு வந்த அந்த இயக்கம்கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுவீடனில் கிரேட்டாவின் மாணவர் இயக்கம் தொடக்கப்பட்டு மூன்றாவது ஆண்டு நிறைவு நாளில் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் இந்த எச்சரிக்கை அறிக்கை வெளியாகி இருக்கிறது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *