ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் பூமியதிர்ச்சி, சுமார் 950 பேர் மரணம்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியிருக்கும் பக்திகா மாகாணத்தில் கடும் பூமியதிர்ச்சி ஒன்று உண்டாகியது. அதனால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன. சுமார் 950 பேருக்கும் அதிகமானோர் இறந்திருப்பதாகவும் அந்த எண்ணிக்கை விபரங்கள் மேலும் வெளிவரும்போது அதிகரிக்கும் என்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் செய்திகள் குறிப்பிடுகின்றன. சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் படங்களிலிருந்து பல வீடுகள் நாசமடைந்திருப்பதும் அவைகளின் கீழ் பலர் மாட்டிக்கொண்டிருப்பதும் தெரியவருகிறது.
இதுவரை அறிந்தவரை பெரும்பாலான மரணங்கள் பக்திகா மாகாணத்திலேயே நடந்திருப்பதாகவும் பக்கத்திலிருக்கும் கோஸ்ட் மாகாணத்தில் சுமார் 25 மரணங்கள் பதியப்பட்டிருக்கின்றன. மலைப்பிரதேசமான அப்பகுதிகளில் தூரத்திலிருக்கும் கிராமங்கள் பலவற்றுடன் தொடர்புகள் இல்லாமலிருப்பதாகவும் தெரியவருகிறது. மீட்புப்படைகள் ஹெலிகொப்டர் மூலமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வோருக்கான உதவிகளைச் செய்ய அனுப்பப்பட்டிருக்கின்றன.
உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானைப் புறக்கணித்திருக்கும் நிலையில், தலிபான்களின் அரசின் கீழ் நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சீரடைந்த நிலையிலிருக்கிறது. ஐ.நா உட்படச் சில உதவி அமைப்புக்களே நாட்டில் தொடர்ந்தும் சில மனிதாபிமானத் திட்டங்களை நடத்தி வருகின்றன. பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச உதவிகளை எதிர்பார்ப்பதாகத் தலிபான்களின் அரச அதிகாரிகள் வேண்டிக்கொள்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்