ரஷ்யாவிலிருந்து கலீனின்கிராட் பிராந்தியத்துக்குக் கொண்டுசெல்லப்படும் பொருட்களைத் தடை செய்தது லிதுவேனியா.
ரஷ்யாவுக்கு பால்டிக் கடல் பகுதியில் இருக்கும் துறைமுகப் பிராந்தியமான கலீனின்கிராட் மிகவும் முக்கியமானது. அங்கேதான் ரஷ்யாவின் முக்கிய கடற்படையில் ஒன்றான பால்டிக் கடற்படைப்பிரிவு மையம்கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் நிலப்பகுதியிலிருந்து கலீனின்கிராட்டுக்கான பொருட்கள் லிதுவேனியாவின் ஊடாகவே கொண்டுசெல்லப்பட முடியும். அந்த வழியே ரஷ்யா குறிப்பிட்ட சில பொருட்களைக் கொண்டுசெல்லாக் கூடாது என்று சில நாட்களுக்கு முன்னர் தடைபோட்டிருக்கிறது லிதுவேனியா.
லிதுவேனியா போட்டிருக்கும் தடைகள் சர்வதேச விதிகளுக்கு முரணானவை, அவை தொடருமாயின் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோபத்துடன் எச்சரித்திருக்கிறது ரஷ்யா.
“நாம் தடைகள் எதையும் எங்களிஷ்டப்பட போடவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் போட்டிருக்கும் தடைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்,” என்கிறார் லிதுவேனிய வெளிவிவகார அமைச்சர் கபிரியேலியுஸ் லாண்ட்பெர்கிஸ். கட்டுமானப் பொருட்கள், முக்கிய தொழில்நுட்பச் சாதனங்கள், நிலக்கரி மற்றும் உலோகப்பொருட்களை ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக ஏற்றுமதி இறக்குமதி செய்வதைத் தடுக்கும் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்திருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். தமது நாட்டின் முடிவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைமையுடன் ஆலோசனை செய்த பின்னரே எடுக்கப்பட்டது என்கிறார் அவர்.
போலந்துக்கும், லிதுவேனியாவுக்கும் இடையே இருக்கும் ரஷ்ய நிலப்பகுதியான கலீனின்கிராடில் சுமார் 430,000 பேர் வாழ்கிறார்கள். லிதுவேனியாவின் மேலுமொரு எல்லை நாடான பெலாரூஸிலிருந்து ரஷ்யா கலீனின்கிராடுக்குத் தேவையான பொருட்களை ரயில் மூலம் கொண்டு செல்கிறது. அதைத் தவிர ரஷ்யா பால்டிக் கடல் மூலம் கலீனின்கிராட்டுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்