கடும் வெப்பமும் வரட்சியும் இத்தாலியின் முக்கிய நதியில் நீர்மட்டத்தைப் பெருமளவு குறைத்திருக்கிறது.
வருடத்தின் பருவகாலத்துக்கு வழக்கமில்லாத கடும் வெம்மை, வழக்கம்போல மழைவீழ்ச்சி இல்லாமை, பனிக்காலம் வரட்சியாக இருந்ததால் மிகைப்படக் கிடைக்கும் நீரான கரையும் பனி இல்லாமல் போனவை ஆகிய காரணங்களால் இத்தாலியின் வடக்கிலிருக்கும் மிகப்பெரிய நதியான பூ வரண்டுபோயிருக்கிறது.
பூ நதியின் வரட்சி நிலைமையும் அதை எதிர்நோக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் திங்களன்று இத்தாலியின் அமைச்சர்கள் சிலர் ஒன்றுகூடி விவாதித்தனர். நதியின் வரட்சியானது சிகப்பு விளக்கு எச்சரிக்கையாக இருப்பினும் தொடர்ந்தும் நதியிலிருந்து விவசாயத்துக்குத் தற்போதைக்கு நீர் எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
“நிலைமை மிகவும் விசனத்துக்கு உரியது. இதுபற்றிய அரசியல் ரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டு விரைவி அறிவிக்கப்படும்,” என்று விவசாயத்துறை அமைச்சர் ஸ்டிவானோ பத்துனெல்லி தெரிவித்தார்.
மக்கியோரே, கோமோ ஆகிய இத்தாலியின் வடக்கிலிருக்கும் குளங்களும் சரித்திரம் காணாத அளவு குறைவான நீர்மட்டத்துடன் இருக்கின்றன. மக்கியோரே குளத்தில் வழக்கத்தை விட 22 % நீரும், கோமோவில் 25 % நீருமே இருக்கின்றன. பூ நதி பாயும் படோவா நகரில் அந்த நதி 3.7 மீற்றர் நீர்மட்டத்தால் குறைந்திருக்கிறது. இது 70 வருடங்களாகக் காணப்படாத வரட்சியாகும்.
இத்தாலியில் மழைவீழ்ச்சி வழக்கமான அளவைவிடப் பாதியாகியிருக்கிறது. வட இத்தாலியின் பெரும்பாகத்தில் நீண்ட காலமாகத் தொடர்ச்சியாக மழை இல்லாததால் அப்பகுதியின் விவசாயம் கேள்விக்குறியாகியிருக்கிறது. விரைவில் மழை கிடைக்காவிட்டால் ஜூலை மாதத்தின் அறுவடை பெருமளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
கடந்த 50 வருடங்களாகவே இத்தாலியின் வெப்பநிலை அதிகரித்து வந்திருக்கிறது. சமீப வருடங்களில் வெப்பநிலை அதிகரிப்பு வேகமாகியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்