நாட்டோ அமைப்பில் அங்கத்துவர்களாக பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பின் பக்க விளைவுகளில் ஒன்றாக நாட்டோ இராணுவப் பாதுகாப்பு அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர சுவீடனும், பின்லாந்தும் விருப்பம் தெரிவித்தன. அந்த அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர்வதானால் ஏற்கனவே இருக்கும் அங்கத்துவர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவைப் பெறவேண்டும் என்ற நிலையில் அவர்களில் ஒரு நாடான துருக்கி இவ்விரு நாடுகளும் நாட்டோவில் சேர்வதானால் அவர்கள் குர்தீஷ் விடுதலை அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவேண்டும் என்று தெளிவாகக் கூறி எதிர்த்தது.
எதிர்பாராதவிதமாக துருக்கி போட்ட அரசியல் குண்டால் திகைத்துப்போனவர்கள் நாட்டோவின் மற்றைய அங்கத்தவர்களும், பொதுக் காரியதரிசியும் மட்டுமல்ல சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளும் கூட. அவர்கள் இதனால் துருக்கியிடம் தொடர்புகொண்டு அரசியல் பேரம் பேசும் நிலைமை ஏற்பட்டது.
துருக்கியால் தீவிரவாத அமைப்புக்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் குர்தீஷ் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் இயக்கங்களை சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளும் தீவிரவாத அமைப்புக்களாகப் பிரகடனப்படுத்த வேண்டும். அந்த அமைப்புக்களை சேர்ந்த போராளிகளுக்கு இந்த நாடுகள் அடைக்கலம் கொடுக்ககாலாது. அவர்களுடைய அமைப்புக்களை இந்த நாடுகளில் இயங்கவும் விடலாகாது. அவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்களில் துருக்கி சுட்டிக்காட்டுபவர்களை அவர்களிடம் கையளிக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்த துருக்கி அவற்றைப் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிடுகிறது.
ஸ்பெய்னில் மாட்ரிட் நகரில் நாட்டோவின் பொதுக் காரியதரிசி ஸ்டோல்ட்டன்பர்க் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாட்டோ அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர சுவீடனுக்கும், பின்லாந்துக்கும் உத்தியோகபூர்வமாக அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அவ்விரு நாடுகளும் தமது வெளிவிவகார அரசியல் கோட்பாடுகளை நாட்டோ அமைப்பின் கோட்பாடுகளுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளச் சம்மதித்திருக்கின்றன.
துருக்கியின் விசனத்தைக் கவனத்தில் கொண்டு தமது நாடுகளில் தீவிரவாதிகள் இயங்கவோ, பதுங்கி வாழவோ அனுமதிப்பதில்லை என்றும் சுவீடனும், பின்லாந்தும் உறுதிகொடுத்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்