உக்ரேன் போர் நோர்வேயின் சிவால்பாத் பகுதியில் அரசியல் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.
சிவால்பாத் பகுதியில் ரஷ்யர்கள் வாழும் பாரன்ஸ்பெர்க் குடியிருப்புக்கு ரஷ்யா அனுப்பும் அவசியமான பாவனைப் பொருட்களை நோர்வே தடை செய்வதாக புதனன்று ரஷ்யா குற்றஞ்சாட்டியிருக்கிறது. நோர்வேக்கு வடக்கில் இருக்கும் சிவால்பாத் தீவுப்பிராந்தியம் நோர்வேக்கு உரித்தானது. ஆயினும் பிரத்தியேக சர்வதேசச் சட்டங்களுக்குள் இயங்கும் அங்கே ரஷ்யா 1930 களிலிருந்து சுரங்கங்களைத் தோண்டி கனிமப்பொருட்களை எடுத்து வருகிறது.
பார்னட்ஸ்பெர்க் குடியிருப்பில் சுமார் 100 ரஷ்யர்கள் வாழ்கிறார்கள். அங்கே ஒரு ரஷ்ய வெளியுறவு அலுவலகமும் உண்டு. அங்கே வாழும் ரஷ்யர்களுக்கு அனுப்பப்படும் உணவு, மருந்துகள், கட்டடப் பொருட்கள் போன்றவைகளை உள்ளே நுழைய நோர்வே அனுமதிக்காதது பற்றி மொஸ்கோவிலிருக்கும் நோர்வேயின் தூதுவரை அழைத்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறது ரஷ்ய வெளியுறவு அமைச்சர். அத்துடன் பதிலுக்குத் தாமும் தண்டிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ரஷ்யா மிரட்டியிருக்கிறது.
அதற்குக் காரணம் ரஷ்யாவின் மீது நோர்வே போட்டிருக்கும் கட்டுப்பாடுகளே என்று நோர்வே அரசு பதிலளித்திருக்கிறது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக இணையத்தில் செயற்படும் கில்நெட் என்ற இணைய ஊடுருவல் குழுவினர் கடந்த தினங்களில் நோர்வேயின் அதிகார மையங்களைக் குறிவைத்து இணையத் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. நோர்வேயின் பிரபல தினசரி ஒன்றின் இணையத்தளமும் தாக்கப்பட்டிருப்பதாக அத்தினசரி குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்