பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை, தயாரிப்பு, ஏற்றுமதி ஆகியவற்றை நிறுத்த இந்தியா தயாராகிறது.
இந்திய அரசு தான் ஏற்கனவே அறிவித்தபடி நாடெங்கும் ஒற்றைப் பாவனைப் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை மட்டுமன்றி, தயாரிப்பு, ஏற்றுமதி ஆகியவற்றையும் நிறுத்துவதற்குத் தயாராகிறது. அப்பொருட்களைத் தயாரிப்பவர்கள் கடைசி நிமிடம் வரை அச்சட்டத்தை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும்போதும் அரசு தனது முடிவில் மாறத் தயாராக இல்லை என்கிறது.
இதற்கு முன்னரும் இந்தியாவில் வெவ்வேறு பிராந்தியங்களில் ஒற்றைப் பாவனைப் பிளாஸ்டிக் பாவனையைத் தடை செய்தாலும் முதல் தடவையாக அச்சட்டம் நாடு தழுவிய அளவில் ஜூலை 01 2022 முதல் அமுலுக்குக் கொண்டுவரப்படுகிறது. அது முதல் கட்டத்தில் 19 விதமான ஒற்றைப் பாவனைப் பிளாஸ்டிக் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கின்றன. “அதிகமாகத் தேவைப்படாதவை” என்று கருதப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவே அவை. அப்பொருட்கள் அனேகமாக இயற்கையிலேயே வீசப்படும் ஆபத்துள்ளவையாகும்.
2019 இல் சுமார் 13 மில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பாவனைக்குப் பின்னர் தவறான முறையில் கையாளப்பட்டன. அவை இயற்கையில் வீசப்பட்டன அல்லது மீள்பாவனை வட்டத்துக்குள் வரவில்லை. சர்வதேச அளவில் எந்த ஒரு நாட்டிலும் இத்தனை மோசமான முறையில் பிளஸ்டிக் பாவனைப்பொருட்களைக் கையளவில்லை என்கின்றன புள்ளிவிபரங்கள்.
அமுலுக்கு வந்திருக்கும் தடையானது ஒற்றைப் பாவனைப் போத்தல்கள், பைகள் போன்ற பெருமளவில் பாவிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான பொருட்களை உட்படுத்தவில்லை. இந்திய அரசு இன்னும் தனது நாட்டில் பிளாஸ்டிக் பாவனைப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களே அவற்றை மீண்டும் எடுத்து பாவனைக்கு உட்படுத்தவேண்டும் என்று நிலைப்பாட்டை அறிமுகப்படுத்தவில்லை.
இந்தியாவின் சுற்றுப்புற சூழல் அமைச்சர் பூபேந்தர் சிங் அரசு கொண்டுவந்திருக்கும் தடையைத் தள்ளிப்போடும்படி கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்களின் வேண்டுகோளைக் காதில் போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். இந்த நடவடிக்கை போதாது என்று பலரும் சுட்டிக் காட்டினாலும் இது சரியான வழியில் ஆகக்குறைந்த ஒரு நடவடிக்கையென்று சில சூழல் பேணல் அமைப்புக்கள் பாராட்டுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்