லிதுவேனியா தமது எல்லையூடாக கலீனின்கிராடுக்கு ரஷ்யப் பொருட்களை அனுமதிக்கவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்.
ரஷ்யாவின் நிலப்பகுதியிலிருந்து கலீனின்கிராட்டுக்கான பொருட்கள் லிதுவேனியாவின் ஊடாகவே கொண்டுசெல்லப்பட முடியும். அந்த வழியே ரஷ்யா குறிப்பிட்ட சில பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடாது என்று சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் தடுத்தது லிதுவேனியா. அத்தடைகளை நீக்கி அவ்வெல்லையூடாக ரஷ்யப் பொருட்களை அனுமதிக்குமாறு புதனன்று ஐரோப்பிய ஒன்றியத் தலைமை தெரிவித்தது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைமையின் உத்தரவைத் தாம் ஏற்றுக்கொள்வதாக லிதுவேனியா தெரிவித்தது. ஒன்றியத்தின் ஒற்றுமையை வெளிக்காட்ட தாம் அதைச் செய்யும் அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையின் அந்த நகர்வு அவர்கள் ரஷ்யாவுக்கு வளைந்து கொடுப்பதையே காட்டுவதாக லிதுவேனியாவின் வெளிவிவகார அமைச்சரகம் குறிப்பிட்டிருக்கிறது.
ரஷ்யாவின் ரயிலில் சரக்குகளை அனுமதிக்கும் அதே சமயம் லிதுவேனிய எல்லையூடாக பாரவண்டிகளில் சரக்குகளைக் கொண்டுசெல்வதைத் தொடர்ந்தும் தடுக்கலாம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம். ஐ.ஒன்றியத்தின் முடிவை ரஷ்யா வரவேற்றது. அது தமக்கும் ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளிலான ஒப்பந்தம் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது. அதை மறுத்த ஐ. ஒன்றியம் தாம் ரஷ்யாவுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்கிறது.
லிதுவேனியாவில் தனது படைகளை வைத்திருக்கும் ஜேர்மனியே மேற்கண்ட முடிவுக்குப் பின்னணியில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ரஷ்யாவுடனான முரண்பாடுகள் மேலும் இறுகுவதை ஜேர்மனி தவிர்க்க விரும்புகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்