“ஆஸ்ரேலியாவின் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டுச் சீரழிந்திருக்கிறது,” என்கிறது அரசின் ஆராய்வு அறிக்கை.
ஆஸ்ரேலியாவில் தற்போது இருக்கும் தாவர இனங்களில் உள்நாட்டில் இருந்தவையை விட வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து அறிமுகமாக்கப்பட்டவையே அதிகம். கடந்த தசாப்தத்தில் மட்டுமே 377 தாவரங்கள், உயிரினங்கள் அழிவை நெருங்க ஆரம்பித்திருக்கின்றன. அவைகளில் 202 கடந்த ஐந்தாண்டுகளுக்குள் பெருமளவில் அழிய ஆரம்பித்திருப்பவை ஆகும்.
ஆஸ்ரேலியாவின் கடந்த அரசால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த டிசம்பரில் வெளியாகி இதுவரை வெளியிடப்படாமல் இருந்த 2021 க்கான ஆஸ்ரேலியாவின் சுற்றுப்புற சூழல் நிலைமை பற்றிய அறிக்கை மேற்கண்ட திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. நிலத்தில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் மட்டுமன்றி நாட்டைச் சுற்றியிருக்கும் கடல் சார்ந்த உயிரினங்களின் நிலைமையும் கூடப் படு மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
2019 – 2020 இல் நாட்டில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீக்களால் அழிக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கை மட்டுமே மூன்று பில்லியன்களாகும். உலக நாடுகள் எவற்றையும் விட ஆஸ்ரேலியாவிலேயே பாலூட்டி உயிரினங்கள் அதிகளவில் அழிந்திருக்கின்றன. அங்கே சுமார் 100 உயிரினங்கள் முற்றாக அழிந்திருக்கின்றன.
ஆஸ்ரேலிய மக்கள் பல தடவைகள் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தமது முக்கிய கரிசனை நாட்டின் சுற்றுப்புற சூழல் மற்றும் பூமியின் காலநிலை மாற்றங்களைத் தடுப்பது பற்றியதே என்று குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள். மே மாதம் நடந்த தேர்தலின் முடிவை நிர்ணயிப்பதிலும் அவையே முக்கிய இடத்தைப் பிடித்தன.
நாட்டில் ஆட்சியிலிருந்த தாராளவாதப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் கட்சியின் பல முக்கிய புள்ளிகள் ஆங்காங்கே சுற்றுப்புற சூழல் ஆர்வல வேட்பாளர்களிடம் தோற்றனர். நாட்டின் இரண்டு ஆளும் சபைகளுக்கும் என்றுமில்லாத அளவில் சூழலைப் பேணுவதை முன்னிலைப்படுத்திய அரசியல்வாதிகளே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சாள்ஸ் ஜெ. போமன்