“ஹங்கேரியர்கள் கலப்பு இனமல்ல, கலப்பினமாக விரும்பவுமில்லை,” என்கிறார் பிரதமர் ஒர்பான்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பல தடவைகள் பற்பல விடயங்களிலும் முட்டி மோதும் ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஒர்பான் கலப்படமற்ற இனம் பற்றி வெளியிட்ட கூற்று ஹங்கேரிய, ஐரோப்பிய அரசியல்வாதிகளை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. “நாங்கள் கலப்பு இனமல்ல, கலப்பு இனமாக நாம் விரும்பவுமில்லை,” என்று சனிக்கிழமையன்று பல்கலைக்கழகம் ஒன்றில் ஆற்றிய உரையொன்றில் ஒர்பான் குறிப்பிட்டிருந்தார்.
“ஐரோப்பா இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது,” என்று அவர் விபரித்தார். ஒரு பகுதி ஐரோப்பா வெவ்வேறு இன மக்கள் கலந்து வாழும் நாடுகளாகியிருப்பதை விபரித்த அவர், ஐரோப்பியர்களும் ஐரோப்பியரல்லாதோரும் கலந்துவிட்ட நாடுகள் நாடுகளல்ல என்று சாடினார். பல இனங்கள் கலந்து வாழும் ஐரோப்பிய நாடுகள் மத்திய ஐரோப்பாவையும் அதே போல மாற்ற முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றார் ஒர்பான்.
“எங்கள் நாட்டில் வாழும் நீங்கள் யாராக இருப்பினும், உங்கள் தோலின் நிறம் .எதுவாக இருப்பினும் நாம் உங்களை வரவேற்கிறோம். ஒர்பான் எதைச் சொன்னாலும் எங்கள் சமூகத்தில் வாழும் எல்லோரும் வித்தியாசமானவர்களாக இருப்பது எங்கள் பலமே தவிர பலவீனமல்ல,” என்றார் ஒர்பானுக்குப் பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சி அரசியல்வாதி Katalin Cseh.
“பல இனங்கள் சரித்திர ரீதியாகக் கலந்திருக்கும் நாம் வாழும் இந்தப் பிராந்தியத்தில் இருந்துகொண்டு சுத்தமான இனம், கலப்படமில்லாத இனமென்றெல்லாம் குறிப்பிடுவது ஆபத்தானது, மாயையும் கூட,” என்று ஒர்பானுக்குத் தனது டுவீட்டின் மூலம் பதிலளித்தார் பக்கத்து நாடான ருமேனியாவின் அரசியல்வாதி ஆலின் மிதூத்தா.
விக்டர் ஒர்பான் விரைவில் அமெரிக்காவுக்குப் பயணித்து அங்கே பழமைவாதிகள் நடுவே உரையாற்றவிருக்கிறார். அமெரிக்காவின் தாராளவாதப் போக்கால் அதிருப்தியடைந்திருக்கும் பழமைவாதிகள் நடுவே ஒர்பான் சமீப காலத்தில் பிரபலமடைந்து வருகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரேன் ஆதரவை ஒர்பான் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். போரில் ரஷ்யாவை வெல்வதைக் குறியாக வைக்காமல் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் வழிகளை ஐரோப்பிய நாடுகள் யோசிக்கவேண்டும் என்கிறார் அவர். ஐரோப்பிய நாடுகள் தமது நுரையீலரைத் தாமே ஓட்டையாக்கிக்கொண்டன என்று ரஷ்யாவுக்கு எதிரான மேற்கு நாடுகளின் முடக்கங்களை அவர் விமர்சித்து வருகிறார்.
“போரில் உக்ரேன் என்றுமே ரஷ்யாவை வெல்ல முடியாது. ரஷ்யாவின் இராணுவம் பலமானது. அவர்களுடைய கோரிக்கை தமக்கெதிரான பாதுகாப்பு உத்தரவாதமாகும். உக்ரேனின் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா முன்வரவேண்டும்,” என்பது ஒர்பானின் நிலைப்பாடு.
சாள்ஸ் ஜெ. போமன்