திறந்தவெளித் தொழிலாளர்கள் ஆகக்கூடியது எந்த வெப்பநிலையில் வேலை செய்யலாம் என்ற கேள்வி ஐரோப்பிய ஒன்றியத்தில் எழுந்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் வறுத்தெடுக்கும் வெப்பநிலை பல முனைகளிலும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஸ்பெய்னில் மாட்ரிட் நகரில் கடந்த வாரத்தில் திறந்தவெளியில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் மூவர் இறந்தார்கள். அதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் திறந்தவெளியில் வேலைசெய்பவர்கள் ஆகக்கூடியது எந்த வெப்பநிலையில் அனுமதிக்கப்படலாம் என்ற கேள்வி ஐரோப்பாவின் தொழிற்சங்கங்களால் எழுப்பப்பட்டிருக்கின்றன.  

ஐரோப்பிய ஒன்றியத் தொழிலாளர்களில் 23 % தமது சேவையில் கால் பங்குக்காலம் கடும் வெப்பநிலையைத் தாங்க வேண்டியிருக்கிறது. ஐரோப்பாவின் ஒரு சில நாடுகளிலேயே அவர்கள் எந்த வெப்பநிலையில் வெளியே சேவையிலிருக்க அனுமதிக்கப்படலாகாது என்ற சட்டங்கள் இருக்கின்றன. அதைத் தவிர ஆங்காங்கே சில நாடுகளின் பகுதிகளில் அதுபற்றிய கட்டுப்பாடுகள் இருப்பினும் பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர்களுக்கு அதீத வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பு சட்டரீதியாகக் கொடுக்கப்படவில்லை. கட்டுமான வேலைகளில் ஈடுபடுகிறவர்களில் 38 விகிதத்தினரும், தொழிற்சாலைகள், விவசாயம் ஆகியவற்றில் ஈடுபடுகிறவர்களிடையே 36 விகிதத்தினரும் தமது ஊழியத்தின்போது கடும் வெப்பநிலையை எதிர்கொள்கிறார்கள்.

“காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளும்போது தொழிலாளர்களே முதலணியில் பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள். எனவே, அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது மிக அவசியம்,” என்கிறார் ஐரோப்பிய தொழிற்சங்கங்களின் காரியதரிசி.

ஸ்பெய்னில் அதீத வெப்பநிலைப் பாதிப்பால் இறந்துபோன தொழிலாளர்கள் வாழும் பகுதியில் எந்த வெப்பநிலையில் ஒருவர் வெளியே வேலை செய்யலாகாது என்ற சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அது குறிப்பிட்ட தொழில்துறையினருக்கு மட்டுமே. இறந்தவர்களில் ஒருவர் 60 வயதான வீதி துப்பரவுசெய்யும் தற்காலிகத் தொழிலாளி ஆகும். இன்னொருவர் 56 வயதான பண்டகசாலைத் தொழிலாளியாகும். அவ்விருவரும் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் வேலை செய்தார்கள். 

காலைநிலை மாற்றத்தின் விளைவாக உலகின் சராசரி வெப்பநிலை 1.1 பாகை செல்சியஸால் அதிகரிக்கும். ஐரோப்பாவின் பகுதிகளிலும், வேறு சில பிராந்தியங்களிலும் இனிமேல் அடிக்கடி அதீத வெப்பநிலை உண்டாகும். அதன் காலம் நீண்டுகொண்டே போகும் என்கிறார்கள் காலநிலை ஆராய்ச்சியாளர்கள்.

“இந்த உண்மையை எதிர்கொள்ளும் சமயத்தில் சமூகத்தில் முதுகெலும்பான தொழிலாளர்களின் ஆரோக்கியம் பேணலை அரசியல்வாதிகள் அலட்சியம் செய்யலாகாது,” என்கிறார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *