கொசோவோ – செர்பிய எல்லையில் பதட்ட நிலை. துப்பாக்கிச் சூடுகள் பரிமாறப்பட்டன.
1990 களில் ஏற்பட்ட பால்கன் போர்களின் மனக்கசப்புகள் பிரிந்துபோன யூகோஸ்லாவியாவின் குடியரசுகளுக்கிடையே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றன. அவை அடிக்கடி வெவ்வேறு சிக்கல்களாக உருவாகிப் பதட்ட நிலையை ஏற்படுத்துகின்றன. அவற்றில் ஒன்றுதான் செர்பியாவால் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளப்படாத கொசோவோவுக்கும் செர்பியாவுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகள்.
கொசோவோவுக்குள் சுமார் 50,000 செர்பர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு செர்பியா கடவுச்சீட்டுகளையும், அடையாள அட்டைகளையும் கொடுத்திருக்கிறது. அவர்களுடைய வாகனங்கள் செர்பியாவின் வாகனப் பதிவு அட்டைகளுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடந்து வருகின்றன. ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கொசோவோவுக்குள் நுழையும் செர்பியர்களின் வாகனங்கள் கொசோவா வாகன அட்டைகளைக்கு மாறுவதுடன், அவர்களுடைய செர்பிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக கொசோவா அடையாள அட்டைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கொசோவா அரசு உத்தரவிட்டிருந்தது.
தனது முடிவுக்கான காரணமாக, செர்பியா அங்கே வசிக்கும் கொசோவா இனத்தவர்கள் செர்பியாவின் வாகனப் பதிவுகளுடன், செர்பிய அடையாள அட்டைகளையே பாவிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு நிலவுவதைக் கொசோவோ சுட்டிக் காட்டுகிறது.
ஞாயிறன்று செர்பியாவுடனான கொசோவோவின் வடக்கு எல்லையில் பதட்ட நிலை ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான செர்பர்கள் எலையில் சேர்ந்து அதை மறித்து வந்தார்கள். கொசோவோவின் எல்லைப்பாதுகாவலகள் அங்கே ஆயுத சகிதமாக நின்றனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், எவரும் காயமடையவில்லை.
நிலைமையைச் சமாளிக்க அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் குறுக்கிட்டு கொசோவோவின் பிரதமரிடம் பேசினர். அவர்களுடைய முயற்சியால் ஆகஸ்ட் முதலாம் திகதி கொண்டுவரப்படவிருந்த சட்டம் செப்டெம்பர் முதலாம் திகதிக்குத் தள்ளிப் போடப்பட்டது. இரண்டு நாட்டின் தலைவர்களும் ஏற்பட்ட நிலைமைக்கு ஒருவரொருவரைக் குற்றஞ்சாட்டுவது தொடர்கிறது.
தற்காலிகமாக அந்த எல்லைத்தகராறு ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. அதையடுத்து உரை நிகழ்த்திய செர்பிய ஜனாதிபதி தமது நாடு எடுத்த முடிவிலிருந்து மாறப்போவதில்லை என்றும், கொசோவோவை வெற்றிபெற்றே தீருவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்