அல்-கைதா தலைவன் அய்மான் அல் ஸவாகிரி குறிபார்த்துத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் வரை உலகைத் தமது தீவிரவாதத் தாக்குதல்களால் அதிரவைத்து வந்த அல்- கைதா இயக்கத்தின் தலைவராக இருந்து வந்த அய்மான் அல்-ஸவாகிரியைக் காற்றாடி விமானம் மூலம் குறிபார்த்துத் தாக்கிக் கொன்றதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். சனிக்கிழமையன்று அமெரிக்காவின் வெளிவிவகார உளவுப்படையின் இயக்கத்தில் காபுலில் அத்தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அல்-கைதாவின் நிறுவனராக இருந்த ஒசாமா பின் லாடின் காலத்திலேயே அவ்வியக்கத்தின் இரண்டாவது முக்கிய புள்ளியாக இருந்தவர் அல் ஸவாகிரி. 1951 இல் எகிப்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அல் ஸவாகிரி மருத்துவக் கல்வியைப் பெற்றவர். தனது உயர்கல்விக் காலத்திலேயே தீவிரவாதம் மூலம் தனது குறிக்கோளை அடைவதற்காக ஒரு குழுவை நிறுவிச் செயற்பட ஆரம்பித்திருந்ததாக விபரங்கள் தெரிவிக்கின்றன. 1980 களில் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக அல் ஸவாகிரி சிறைக்கனுப்பப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் பாகிஸ்தானுக்குச் சென்று அங்கே பின் லாடினுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் அல் ஸவாகிரி.
செப்டெம்பர் 11 தாக்குதல்களைப் பின்னணியிலிருந்து திட்டமிட்டு நடத்தியவர்களில் அல் -ஸவாகிரி முக்கியமானவர் என்று அமெரிக்காவின் விசாரணைகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன. அமெரிக்க அரசு அல் ஸவாகிரியைக் கைதுசெய்ய உதவும் விபரங்களைத் தருபவர்களுக்கு 25 மில்லியன் டொலர்கள் தருவதாக அறிவித்திருந்தது.
ஒஸாமா பின் லாடின் கொல்லப்பட்டபின் அல் கைதா இயக்கத்துக்குத் தலைமைப் பொறுப்பை அல் ஸவாகிரி பெற்றுக்கொண்டார். ஆனால், சர்வதேசத்தின் கண்கள் அல் கைதா இயக்கத்தின் முக்கிய புள்ளிகளைத் தேடி வந்ததால் அவ்வியக்கத்தால் முன்னரைப் போன்று பல தாக்குதல்களை நடத்த இயலவில்லை. அடிக்கடி தான் வாழுமிடத்தை மாற்றிவந்த அல் -ஸவாகிரி ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைத்தபின் காபுல் நகரில் தனது குடும்பத்துடன் ஒரு வீட்டில் வாழ ஆரம்பித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
தலிபான் இயக்கத்தினரின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிராஜுத்தீன் ஹக்கானிக்குச் சொந்தமான வீட்டிலேயே அல் – ஸவாகிரி குடும்பம் குடியேறியிருந்தது. தலிபான்களின் அதி முக்கிய தலைவர்களுக்கு அல் ஸவாகிரியின் நடமாட்டம் தெரிந்திருந்தது. அல் ஸவாகிரியின் மரணம் பற்றி எதுவும் குறிப்பிடாமல் ஆப்கானிஸ்தானில் ஒரு தாக்குதல் நடந்ததாகவும் அது சர்வதேசச் சட்டங்களுக்கு முரண்பாடானது எனவும் தலிபான்களின் அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்