கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்ற சிறீலங்கா குழுவிலிருந்து 10 பேரைக் காணவில்லை.
ஐக்கிய ராச்சியத்தின் பெர்மிங்ஹாம் நகரில் நடந்துவரும் 2022 க்கான கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் சென்ற சிறீலங்கா விளையாட்டுக் குழுவினர் ஓடிப் போவது தொடர்கிறது. சிறீலங்காவுக்குத் திரும்பிப் போகத் தவிர்த்துப் பிரிட்டனில் வாழ்வதற்குத் திட்டமிட்டு இதுவரை 10 பேர் காணாமல் போய்விட்டதாகக் அக்குழுவின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
விளையாட்டு வீரர்கள் ஒன்பது பேரும் ஒரு உத்தியோகத்தரும் இதுவரை காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் மூவர் கடந்த வாரமே தலைமறைவானார்கள். தமது விளையாட்டுப் போட்டிகள் முடிந்ததும் மேலும் ஏழு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இதுபற்றி சிறீலங்காவின் விளையாட்டுக் குழு அமைப்பு உத்தியோகத்தர்கள் பிரிட்டிஷ் பொலீசாருக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.
விளையாட்டுப் போட்டிக் குழுவினருக்கு ஆறு மாத விசாக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. காணாமல் போனவர்களில் மூவரை பிரிட்டிஷ் பொலீசார் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் தொடர்ந்தும் விசா இருப்பதால் உத்தியோகபூர்வமாக அவர்கள் எக்குற்றமும் செய்யவில்லை என்பதால் அவர்களின் இருப்பிடங்களைப் பொலீசார் வெளிப்படுத்தவில்லை. 160 பேரைக் கொண்ட சிறீலக்னா குழுவினரில் மூவர் கடந்த வாரம் காணாமல் போனவுடனேயே சகலருடைய கடவுச்சீட்டுக்களையும் குழுப் பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
கடந்த வருடம் ஒஸ்லோவில் போட்டிகள் நடந்தபோது சிறீலங்காவின் மல்யுத்தக் குழுப் பொறுப்பாளர் காணாமல் போனார். 2014 இல் தென் கொரியாவில் ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது இரண்டு விளையாட்டு வீரர்கள் காணாமல் போய் இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 2004 இல் ஜேர்மனியில் நடந்த கைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காகச் சென்ற 23 பேர்கொண்ட குழுவொன்று மொத்தமாகக் காணாமல் போனது.
சாள்ஸ் ஜெ. போமன்