சித்திரைப் புரட்சியும் இலங்கையும் – 1
இந்த வருடம் மார்ச் நடுப்பகுதியில் சனாதிபதி அலுவலகத்தின் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தலைமையில் “நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நாட்டின் மோசமான சூழ்நிலைக்கும் பொறுப்பேற்று சனாதிபதி உடனடியாகப் பதவி விலகவேண்டும்” என்று கோரி ஒரு எதிர்ப்புப் போராட்டம் கோவிட் விதிமுறைகளையும் மீறி நடந்தது. அதன் பின்னர், இரண்டு வாரங்கள் கழித்து மார்ச் மாதம் 31 ம் திகதி சனாதிபதியின் வதிவிடத்தின் முன்பாக நூற்றுக்கணக்கானவர்கள் இன்னொரு போராட்டத்தை முன்னெடுத்தனர். அது வன்முறையாக மாறியதையடுத்து ஏப்ரல் முதலாம் நாள் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் ஏப்ரல் 9 இல் காலி முகத்திடலில் கோட்டாகோகம உருவாக்கப்பட்டு கோத்தபாயவை உடனடியாக பதவி விலகச் சொல்லித் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு சித்திரைப் புரட்சி என்ற செல்லப் பெயரும் இடப்பட்டது. கோத்தபாய மட்டுமன்றி இதுவரை காலமும் ஊழல் ஆட்சி செய்த ராஜாபக்ஸ குடும்பமே பதவி விலக வேண்டும் என்பது இவர்களின் நிபந்தனையாக இருந்தது.
இதில் பங்கு கொண்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவும் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த போதிலும் பல தொழிற்சங்கங்களும் படிப்படியாக இணைந்து கொண்டன. பெளத்த பிக்குமார் உட்பட பல மதத் தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முன்வந்தனர். இந்த நிலையில், இந்தப் போராட்டத்தின் பின்னால் எதிர்க்கட்சிகளும் வெளிநாட்டு சக்திகளும் இருப்பதாக அரசு குற்றம் சாட்டி வந்தது. புலம்பெயர் தேசத்து தமிழர் அமைப்புகள் சிலவும் நிதி கொடுப்பதாக கதைகளைக் கசியவிட்டு குழப்பம் ஏற்படுத்த முற்பட்டது.
இதேவேளை வடக்கு-கிழக்குத் தமிழர்கள் இந்தப் போராட்டத்திலிருந்து ஆரம்பம் முதலே ஒதுங்கியே இருந்தார்கள். அதற்கு தமிழர்களின் கடந்த கால கசப்பான அனுபவங்களும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கே சென்று தமிழர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நேரடியாகவே கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வும் தொடர்ச்சியாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகளும் ராஜபக்ஸ குடும்ப ஆட்சியை அகற்றுவதில் அமெரிக்காவுக்கு இருந்த அக்கறையை வெளிப்படுத்தியது.
சித்திரைப் புரட்சி தொடங்கி ஒரு மாதம் கழித்து மே 9 அன்று அரசு சில அடிமைகளைத் தூண்டிவிட்டு போராட்டக்கார்கள் மிகக் குறைவாக இருந்த நாள், நேரம் தெரிவு செய்யப்பட்டு போராட்டக்காரர் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதன்போது சில அரசின் அடிமைகளால் சில மதகுருமாரும் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தாலும் விரைவாக பல மக்கள் விரைவாக ஒன்றுகூடி தாக்குதல் நடத்தியவர்களைத் திருப்பித் தாக்கிய நிலையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அது ஒரு தோல்வியான தாக்குதலாகவே அது அமைந்தது.
அதன் பின்னர் இந்தத் தாக்குதலில் SLPP கட்சி முக்கியஸ்தர்கள் சம்பந்தப்பட்டிருந்தது வெளித் தெரிந்த நிலையில் மகிந்த ராஜபக்ஸ பிரதமர் பதிவியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவருக்கு அந்த சந்தர்ப்பம் கோத்தபாயவினால் வழங்கப்பட்டது. அவரோ “கோத்தா நீ வீட்டுக்குப் போ” அதன் பிறகு புதிய அரசை அமைப்பதைப் பற்றிப் பேசலாம் என்று சொல்லி விட்டார். அதன்பின் கோத்தாபாயவினால் ரணில் விக்கிரமசிங்க இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ரணில் பிரதமராக வந்த அதே வாரத்தில் தமிழர்கள் இறுதிப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் வாரமும் வந்த காரணத்தால், ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் ஒரு முக்கிய கேள்வி எழுப்பப்பட்டது. அரசும் படைகளும் இம் முறையும் முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை தடுப்பார்கள் என்ற எண்ணம் இருந்தபோது, ரணில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு அவர்களின் இறந்த உறவுகளை நினைவுகூர உரிமை இருக்கிறது என்று அறிக்கை விட்டார். அதேபோல, காலிமுகத் திடலில் “கோத்தா வீட்டுக்குப் போ” என்று போராட இலங்கை மக்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலாகச் சொல்லி தன்னை நல்லவராக காட்டிக் கொண்டார்.
அதன் பின்னர், சித்திரைப் புரட்சியின் இரண்டாம் மாத முடிவில் ஜூன் 9 இல் அடுத்த முக்கிய ராஜபக்ஸவான பசில் தனது அமைச்சுப் பதவி, MP பதவிகளிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. போராட்டம் தொடர்ந்தது. போராட்டகாரர்கள் நாட்டுக்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் அதற்கு முதல் சனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்பதோடு பல நிபந்தனைகளை முன்வைத்துப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதன் பின்னர் பாராளுமன்றத்தில் பல நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்க, காலிமுகத் திடல் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. தொடர்ச்சியான மக்கள் போராட்டம், தொடர்ந்த பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் உதவி கிடைக்காமை போன்ற சூழ்நிலையில் ஜூலை மாதம் 9ம் திகதி ரணில், அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க உதவுவும் வகையில் பதவி விலகத் தயார் என்று அறிவித்தார்.
அதே நாளில் போராட்டக்காரர்கள் சனாதிபதி அலுவகம், உத்தியோகபூர்வ இல்லம், பிரதமர் இல்லம் என்பவற்றுக்குள் பலாத்காரமாக நுழைந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ரணிலின் தனிப்பட்ட வதிவிடமும் எரியூட்டப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நாடகங்களுக்கு மத்தியில் கோத்தபாய நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்குச் சென்று பின்னர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். இடைக்கால பிரதமராக இருந்த ரணில் இடைக்கால சனாதிபதியானார்.
அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து சனாதிபதியை தெரிவு செய்யும் நிலை வந்தபோது அனுர குமார திசநாயக்க, சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகப்பெரும மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் போட்டியிட்டனர். திடீரென்று சஜித் போட்டியிலிருந்து விலகி டலஸ் அழகப்பெருமவை ஆதரித்தார். கணிப்பு ரீதியாக டலஸ் வெற்றி பெறுவார் என்ற கூறப்பட்டாலும் ரணிலே ராஜபக்ஸ குடும்பக் கட்சியின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்று சனாதிபதிக் கதிரையில் ஏறி அமர்ந்து கொண்டார்.
மே மாதம் இடைக்காலப் பிரதமராக பதவியேற்றபோது, மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது, அதை நான் தடுக்க மாட்டேன் என்று ரணில் சொன்னார். மே 9 அன்று அரசு போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலைக் கண்டிக்கவும் செய்தார். ஆனால் அதே ரணில், இரண்டு மாதங்கள் கழித்து, ஜூலை 21ம் நாள் ஜனாதிபதியாக பதவியேற்று அன்றிரவே ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை அடித்து விரட்டியதுடன், காலிமுகத் திடலில் இருந்தும் விரட்ட இராணுவத்தினரை ஏவி விட்டார். அதற்கு அவர் தனது பாணியில் வியாக்கியானம் செய்யத் தவறவும் இல்லை.
இந்தத் தாக்குதல் சிங்கள மக்களுக்கு இராணுவத்தின் கோர முகத்தை பார்ப்பதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. அது தமிழர்கள் பல தசாப்தங்களாக பார்த்து வந்த முகம்; பல சிங்களவர்களும் எண்பதுகளின் பிற்பகுதியில் பார்த்த முகம். அதேபோல மூன்று தசாப்த காலங்களின் பின்னர் மீண்டும் அடக்குமுறையாளனாக ரணிலையும் பார்க்க முடிந்தது.
தற்போது போராட்டக்காரர்களின் முதல் இலக்கான ராஜபக்ஸ குடும்பமத்தைப் பதவியிலிருந்து அகற்றும் வேலை நிறைவேறியுள்ளது. இது அவர்களின் வெற்றி போலத் தோன்றினாலும் அந்த இடத்தில் ரணில் ஏறி அமர்ந்து கொண்டது, போராட்டக்காரர்கள் எதிர்பாராத நிலையையே ஏற்படுத்தியுள்ளது எனலாம். அது மட்டுமன்றி மகிந்த, நாமல் உட்பட பல ராஜபக்ஸக்கள் இன்னமும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில்தான் இருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து ரணில் தனது ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்.
(தொடரும்……..)
எழுதுவது : வீமன்