31 மரணங்களின் பின்னர் இஸ்ராயேலுக்கும், ஜிகாத்துக்குமிடையே எகிப்த்திய போர் நிறுத்த ஆலோசனை.
இரண்டு நாட்களாக காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ராயேல் நடத்திவந்த விமானத் தாக்குதல்கள் முடிவுக்கு வரலாம் என்று இஸ்ராயேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடான எகிப்தின் முயற்சியால் இஸ்ராயேலுக்கும் அவர்கள் தாக்கிவந்த இஸ்லாமிய ஜிகாத் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று தயாராகுவதாகத் தெரியப்படுத்தப்படுகிறது.
சனியன்று இரவு காஸா பிராந்தியத்தின் மேலுமொரு ஜிகாத் இராணுவத் தளபதி கொல்லப்பட்டதாக இரண்டு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தமது தாக்குதலுக்கான காரணம் நிறைவு பெற்றதாக இஸ்ராயேல் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு ஜிகாத் தளபதிகள் தவிர ஆறு குழந்தைகள் உட்பட 31 பேர் காஸா பகுதியில் இறந்திருப்பதாக மருத்துவ நிலைய வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இஸ்ராயேலின் தாக்குதல்களுக்குப் பதிலாக ஜிகாத் அமைப்பு காஸாவிலிருந்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ராயேல் மீது ஏவியிருக்கின்றன. ஜெருசலேம் உட்பட்ட பகுதிகளை நோக்கி அவை செலுத்தப்பட்டன.
அதையடுத்தே இரண்டு தரப்பினருக்குமிடையே போர் நிறுத்தத்தைக் கொண்டுவர எகிப்தின் சார்பில் திட்டமொன்று தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு அத்திட்டத்தை ஏற்றுக்கொண்டதா என்பது இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் காஸாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பினரும் போரில் சேர்ந்துகொள்ளலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. அந்த நிலைமை ஏற்பட்டால் இஸ்ராயேலின் தாக்குதல்கள் மேலும் பலமாகலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்