இணையத்தள விளையாட்டு, பாலியல் பக்கங்களிலிருந்து இளவயதினரை விடுவிக்கும் திட்டமொன்றைக் கேரளா அறிமுகப்படுத்துகிறது.
டிஜிடல் அடிமையாகிவிட்டவர்களுக்கு உதவும் திட்டமொன்றை ஆரம்பிக்கவிருக்கிறது கேரள பொலீஸ். D-Dad என்று சுருக்கமான பெயரைக் கொண்ட அந்தத் திட்டம் இணையத்தளங்களில் பாலியல், விளையாட்டுப் பக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட இளவயதினருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இதற்காகக் கேரள அரசு 1.30 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது.
திருவனந்தபுரம், கொச்சி, திரிச்சூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் முதல் கட்டமாகப் பரீட்சாத்தரமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தமது டிஜிடல் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற விரும்பி வருபவர்களுக்கு ஆலோசனைகள் இணையத் தொடர்பு மூலம் கொடுக்கப்படும். ஆலோசனைகளும், உதவிகளும் மேலும் தேவையானவர்களுக்கு மாவட்டங்களில் நேரடிச் சந்திப்பு நிலையங்கள் மூலமும் கொடுக்கப்படும்.
இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிக இணையத்தள இணைப்புக்களும், கைப்பேசிச் சந்தாக்களும் இருக்கின்றன. கொரோனாத்தொற்றுக் கட்டுப்பாடுகள் காலத்தில் பெரும்பாலான வகுப்புக்கள் இணையத்தளத்திலேயே நடத்தப்பட்டன. அதன் விளைவாக பல சிறார்கள் இணையத்தை பாவிக்கப் பழகியதுடன் அதன் இருண்ட பக்கங்களுக்கு அடிமையாகவும் ஆகிவிட்டார்கள்.
கேரளாவின் D-Dad திட்டம் மாநிலத்தின் கல்வி, ஆரோக்கியம், பெண்கள் குழந்தைகளின் மேம்பாடு ஆகிய திணைக்களங்களின் உதவியுடன் நடாத்தப்படவிருக்கிறது. இணையத்தளங்கள் பற்றிய பரந்த அறிவும், பழக்கமும் கொண்ட மனோதத்துவ நிபுணர்கள் இத்திட்டத்தில் உதவிசெய்வார்கள். திட்டத்தில் பங்கெடுக்கத் தேவையான அளவில் அப்படியான துறைசார்ந்த நிபுணர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவது இத்திட்டத்தின் ஒரு சவாலாக இருக்கிறது. எனவே, அத்துறையில் பரந்த அறிவு கொண்ட பொலிசாரும் பயன்படுத்தப்படுவார்கள்.
முதற் கட்டமாகச் சிறார்களுக்கு அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டத்தை வீட்டிலிருக்கும் இளம் பெண்களுக்கும் அறிமுகப்படுத்தும் எண்ணம் பொலீஸ் துறையிடம் இருக்கிறது. இணையத்தளத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக அவர்கள் ஏமாற்றப்படாமலிருக்க அறிவுரை கொடுப்பதே அதன் நோக்கமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்