ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் பற்றிய ரஷ்யாவின் மிரட்டல்கள் அதிகரிக்கின்றன.
உக்ரேனிலிருக்கும் அணுசக்தி நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியதிலிருந்து அதன் செயற்பாடு, பாதுகாப்பு நிலைமைகள் எப்படியிருக்கின்றன என்பது பற்றி அறிய வெளியாரெவரையும் பரிசீலிக்க ரஷ்யா அனுமதிக்கவில்லை. அதன் பாதுகாப்புப் பலவீனமான நிலைமையை அடைந்திருப்பதாகவும் அதன் மீது உக்ரேன் தாக்குதல் நடத்துவதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது. உக்ரேன் அதை மறுத்து வருகிறது.
உக்ரேன் தொடர்ந்தும் தாக்கிவருவதால் Zaporizhzhia அணுசக்தி நிலையம் விபத்துக்கு உள்ளாகுமானால் போலந்து, ஜேர்மனி, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் அதன் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு எச்சரித்திருக்கிறது. கடந்த வாரங்களில் அந்த நிலையம் பல தடவைகள் தாக்கப்பட்டிருப்பினும் அதைச் செய்தது யாரென்பது தெளிவாகவில்லை. அணுசக்தி நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியிருப்பினும் அதன் உக்ரேனிய ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையிலிருக்கிறார்கள்.
சர்வதேச அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு, அமெரிக்கா, ஐ.நா ஆகியோர் கடந்த வாரங்களில் அந்த அணுசக்தி நிலையத்தினுள் நுழைய ஆராய்ச்சியாளர்களை அனுமதிக்கவேண்டும் என்று கோரிவருகின்றன. ஐ.நா-வின் பொதுச்செயலாளர் குத்தேரஸ், துருக்கிய ஜனாதிபதி எர்டகான் ஆகியோர் நிலைமைபற்றி வியாழனன்று கியவ் சென்று உக்ரேனிய ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
பத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா தனது தீவிரவாதப் பயமுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது என்று உக்ரேன் ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டுகிறது. அதேசமயம் ரஷ்யாவின் மிரட்டல் அதிகமாகி வருவதால் தனது மக்கள் ஒரு அணுசக்தி மைய வெடிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தம்மை எப்படித் தயார்செய்துகொள்ளவேண்டுமென்ற எச்சரிக்கைகளை நாடெங்கும் பரப்பி வருகிறது உக்ரேன் அரசு.
சாள்ஸ் ஜெ. போமன்