வரண்ட காலநிலை ஸ்பெய்னின் 5,000 வருடப் பழமையான கட்டமைப்பு ஒன்றைக் காணக்கூடியதாகியது.

ஐரோப்பா கடந்த 500 வருடங்களின் வரட்சியான காலநிலையை எதிர்கொண்டிருக்கிறது. அதில் ஐபீரியத் தீபகற்பப் பிராந்தியமோ 1,200 வருடங்களில் காணாத வரட்சியால் வாட்டப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலேயே இவ்வருட வரட்சியால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடான ஸ்பெய்னில் அதே வரட்சியால் ஏற்பட்ட நன்மையாகக் கருதப்படுகிறது அங்கிருக்கும் அணைக்கட்டொன்றில் நீர்மட்டம் வற்றியதால் காணக்கூடியதாக இருக்கும் ஸ்பெய்னின் கற்களாலான வடிவமைப்பு, “Spanish Stonehenge.”

ஸ்பெய்னின் மத்தியிலிருக்கும் பிராந்தியமான கசரெஸ் பகுதியில் காணப்படும் கற்களால் அடுக்கப்பட்ட அந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக  Dolmen of Guadalperal என்று குறிப்பிடப்படுகிறது. பிரிட்டனிலிருக்கும் இதேபோன்ற பாரிய கற்களாலான பழங்கால அமைப்பு போன்றிருப்பதால் இதை “Spanish Stonehenge” என்றழைக்கிறார்கள். ஸ்பெய்னிலிருக்கும் இந்த வடிவமைப்பு சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஹியூகோ ஓபர்மெயர் என்ற ஜேர்மனிய அகழ்வாராய்ச்சியாளரால் 1926 இல் ஸ்பெய்னிலிருக்கும் கற்களாலான வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 1963 இல் ஸ்பெய்னின் சர்வாதிகாரியாக இருந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவினால் இந்தப் பகுதியில் ஒரு பிராந்திய அபிவிருத்தித் திட்டம் உண்டாக்கப்பட்டது. அச்சமயத்தில் அங்கே அணை கட்டப்பட்டு அந்த வடிவமைப்பு நீருக்குள் போய்விட்டது. இதுவரை நான்கு தடவைகள் மட்டுமே அது காணக்கூடியதாகியது.

“Spanish Stonehenge எப்படி, யாரால் வடிவமைக்கப்பட்டது என்பதற்குத் திட்டவட்டமான பதிலில்லை. அவைகள் கல்லறைகள் போன்ற அமைப்பிலும் இருப்பதாலும், அப்பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாலும் அந்த அமைப்பு முக்கிய மனிதர்களின் கல்லறைகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஸ்பெய்ன் அகழ்வாராய்ச்சியாளர்கள் சிலர் குறிப்பிட்ட அமைப்பை அங்கிருந்து அகற்றி வேறொரு இடத்தில் பார்வைக்கு வைக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது வரட்சியான காலநிலையினால் அப்பகுதியில் நீர்மட்டம் 28% ஆல் குறைந்திருப்பதால் அந்த அமைப்பு தெரியவந்திருப்பது பல சுற்றுலாப் பயணிகளை அங்கே கவிய வைத்திருக்கிறது. அதேசமயம், கடந்த பனிக்காலத்திலிருந்தே மழை மிகக்குறைவாக இருப்பதாலும், வரவிருக்கும் மழைக்காலமும் அதேபோல வரட்சியாகவே இருக்கும் என்று வானிலைக் கணிப்பீடு தெரிவிப்பதாலும் நிலைமை விவசாயிகளுக்கு வயிற்றிலடிப்பதாக இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *