தவறான வானிலை அறிவிப்புக் கொடுத்ததால் ஹங்கேரியின் வானிலை அறிவிப்பு நிலையத் தலைவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ஹங்கேரியின் தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகியவற்றுக்கான அமைச்சர் நாட்டின் தேசிய வானிலை அறிவிப்பு மையத் தலைவரையும், மேலுமொரு உயரதிகாரியையும் பதவியை விட்டு விலக்கியதாக அறிவித்திருக்கிறார். காரணம் வானிலை அறிவிப்பானது சனிக்கிழமையன்று புடாபெஸ்ட்டில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது, தவறானது என்பதாலாகும்.
சனிக்கிழமையன்று தலைநகரான புடாபெஸ்ட் நகரில் கோலாகலமான விழா வாணவேடிக்கைகளுடன் நடத்தப்படவிருந்தது. இவ்வருடம் ஆகஸ்ட் 20 ம் திகதியன்று ஹங்கேரி என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டு 1000 வருடங்களாகிறது. வருடாவருடம் அந்தத் தினத்தில் தேசிய தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வருடம் மேலும் விசேடமாக “ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய விழா” என்ற பெயரில் அது கொண்டாடப்படவிருந்தது.
வானிலை அறிவிப்பு மையம் புடாபெஸ்ட்டில் இடிமின்னல்களுடன் மழைபெய்யும் என்று அறிவித்திருந்ததால் கொண்டாட்டங்களுக்கான திட்டங்களனைத்தும் கைவிடப்பட்டன. அதற்கான காரணம் தவறான வானிலை அறிவிப்பு என்பதாலேயே அதன் உயரதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. “வானிலை அறிவிப்பில் எப்போதுமே ஓரளவு நிச்சயமற்ற கணிப்புகள் இருக்கும்,” என்று வானிலை மையத்தின் சார்பில் மன்னிப்புக் கோரப்பட்டிருக்கிறது.
2006 இல் நடந்த தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது பெரும் சூறாவளியும், இடிமின்னல்களுடன் கடும் மழையும் அந்த நகரைத் தாக்கின. நகரின் ஊடாக ஓடும் நதிக்கரையில் விழாவைக் காணக் கூடியிருந்தவர்கள் மில்லியன் பேருக்கும் அதிகமானோராகும். அவர்களிடையே பீதி பரவியது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
ஹங்கேரியின் எதிர்க்கட்சிகள் நாட்டின் அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. “வானிலை மையத்தால் சரியான காலநிலையை உண்டாக்கிக் கொடுக்க முடியவில்லை என்பதால் உயரதிகாரிகள் விலக்கப்பட்டிருக்கிறார்கள். இது சர்வாதிகார ஆட்சியல்ல, ஹங்கேரியின் Fidesz, ஆகும்,” என்று ஆளும் கட்சியைச் சாடுகிறார்கள்.
1000 ஆண்டுக்கான விழா ஆகஸ்ட் 27 ம் திகதி நடக்குமென்று அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்