அக்காவின் உற்சாகத் தூண்டுதலால் அவளைப் போலவே உலக சாதனை நிகழ்த்தினான் தம்பி.
மிக இளவயதில் தன்னந்தனியாக விமானத்தில் சுற்றிய பெண் என்ற உலக சாதனையை நிறைவேற்றிய ஸாரா ருத்தர்போர்ட்டை உங்களுக்கு நினைவிருக்கும். அவள் அதைத் தனது 19 வயதில் நடத்திக்காட்டினாள். அவளது தம்பி மக் ருத்தர்போர்ட் உலகத்தைத் தனியாக விமானத்தில் சுற்றிவந்த மிகவும் வயது குறைந்தவன் என்ற சாதனையைப் படைத்திருக்கிறான். அவன் அதைச் சாதித்தது 17 வயதிலாகும்.
ஸாராவின் தம்பி மக் ருத்தர்போர்ட் தனது பிரயாணத்தை பல்கேரியாவில் மார்ச் 23 ம் திகதி ஆரம்பித்தார். அந்த நாட்டின் தலைநகரான ஸோபியாவிலிருந்து புறப்பட்டு இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளைத் தொட்டபின் ஆசியாவுக்குப் பறந்தார். ஆசியா, ஆபிரிக்கா இரண்டு கண்டங்களையும் தொட்டபின் அமெரிக்காவுக்குச் சென்று இரண்டு உலகச் சமுத்திரங்கள் மேலாகவும் பறந்தபின் மீண்டும் ஆகஸ்ட் 24 ம் திகதி வந்திறங்கினார். இப்பயணம் 5 மாதங்களில் செய்யப்பட்டது.
2021 இல் டிரேவிஸ் லுட்லோ தனது 18 வயது 150 நாட்களில் செய்த தனியாக விமானத்தில் உலகைச் சுற்றிவரல் என்ற சாதனையை மக் ருத்போர்ட் முறியடித்திருக்கிறார் அதைவிடக் குறைந்த வயதில். மக், ஸாரா ஆகியோரின் பெற்றோர் இருவருமே விமான ஓட்டிகள். அவர்களின் சிறகுகளில் பறந்த இரண்டு பிள்ளைகளுமே உலகச் சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.
மக் ருத்தர்போர்ட் தனது விமான ஓட்டி சான்றிதழைப் பெற்றபோதும் அது ஒரு உலகச் சாதனையாகும். 15 வயது இரண்டு வாரங்களில் மக் அச்சான்றிதழைப் பெற்றிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அக்கா ஸாராவைத் தனது சாதனைக்கு உத்வேகம் ஊட்டியவர் என்று பெருமையுடன் சொல்கிறான் மக்.
சாள்ஸ் ஜெ. போமன்