தனக்கடுத்த பாப்பரசரைத் தெரிவுசெய்ய 21 கர்தினால்களை நியமித்தார் பாப்பரசர் பிரான்சிஸ்.
85 வயதாகிவிட்ட பாப்பரசர் பிரான்சிஸ் சமீப காலமாக நல்ல ஆரோக்கியமான நிலையில் இல்லை. சில மாதங்களாகவே அவர் தள்ளுவண்டியில்தான் நகர்ந்து வருகிறார். தான் விரைவில் ஓய்வுபெறலாம் என்றும் தனக்கடுத்த பாப்பரசரைத் தெரிவுசெய்யவேண்டும் என்றும் சில தடவைகள் அவர் குறிப்பிட்டும் இருக்கிறார்.
சனியன்று வத்திக்கானில் பாப்பரசர் தெரிவுசெய்த 21 கர்தினால்களில் 16 பேர் 80 வயதுக்குக் குறைந்தவர்களாகும். அவர்களும் வரவிருக்கும் பாப்பரசர் தேர்வில் வேட்பாளர்களாக இருப்பார்கள். அவர்களில் இரண்டு இந்தியர்கள் உட்பட ஐந்து பேர் ஆசியர்களாகும். உலகின் 1.3 பில்லியன் கத்தோலிக்கர்களில் 80 விகிதமானோர் உலகின் தெற்குப் பாகத்தைச் சேர்ந்தவர்களகும்.
உலகக் கத்தோலிக்கர்களில் பெரும்பாகத்தினர் சிறுபான்மை இனத்தினராகவும் இருப்பதால் பாப்பரசர் புதியதாகத் தெரிந்தெடுத்திருக்கும் கர்தினால்களில் எதிர்பாராத புதுமுகங்களும் இருப்பதாகத் தெரிகிறது. பாப்பரசர் தேர்வில் பங்கெடுக்கக்கூடிய கர்தினால்களில் தொடர்ந்தும் பெரும்பான்மையினர் ஐரோப்பியர்களே. 40 விகித ஐரோப்பியர்களுக்கு அடுத்ததாக ஆசியர்களும், தென்னமெரிக்கர்களும் தலா 16 விகிதமானோர். ஆபிரிக்கக் கர்தினால்கள் 13 % வட அமெரிக்கக் கர்தினால்கள் 12 % ஆகும்.
63 வயதான ஹைதராபாத் அதிமேற்றிராணியார் பூலா அந்தோனி பாப்பரசரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கர்தினால்களில் ஒருவராகும். அடுத்த பாப்பரசரைத் தேர்ந்தெடுக்கும் சடங்கில் பங்குபற்றவிருக்கும் அவர் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவராகும்.
புதியதாகத் தெரிந்தெடுக்கப்பட்ட கர்தினால்களுக்குச் சம்பிரதாயப்படி பாப்பரசர் சிகப்புத் தொப்பியும், மோதிரமும் வழங்கும் விழா நடைபெறும். அதன் பின்னர் அவர்கள் வத்திக்கானில் பொதுமக்களைச் சந்திப்பார்கள். திங்கள், செவ்வாய் தினங்களில் உலகின் சகல கர்தினால்களும் வத்திக்கானில் ஒன்றுகூடவிருக்கிறார்கள். அச்சமயத்தில் ஜூன் மாதத்தில் அமுலுக்கு வரவிருக்கும் வத்திக்கானின் புதிய அரசியலமைப்புச் சட்டங்கள் அறிமுகப்படுத்திவைக்கப்பட்டு அவை மீதான விவாதங்கள் நடைபெறும்.
சாள்ஸ் ஜெ. போமன்