ரஷ்யாவிடம் தாம் இழந்த தெற்குப் பிராந்தியங்களை மீட்கத் தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக உக்ரேன் அறிவித்தது.
ஓரிரு வாரங்களாகவே உக்ரேன் பாதுகாப்பு அமைச்சு தமது பிராந்தியங்களை மீட்கத் தாக்குதல்களை நடத்தப்போவதாகக் குறிப்பிட்டு வந்திருந்தது. அத்தாக்குதல்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கேர்சன் நகர் உட்பட்ட தென் உக்ரேன் பிராந்தியங்களில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நாட்டின் இராணுவச் செய்தி அறிவிப்பாளர் நத்தாலியா ஹுமாஞ்ஜூக் தெரிவித்தார்.
உக்ரேன் தனது தாக்குதல்களை அதிகரிக்கும் என்று பல இராணுவ அவதானிகளும் கடந்த வாரங்களில் தெரிவித்திருந்தார்கள். அதேபோலவே, ரஷ்ய தரப்பிலும் புத்தின் தனது இராணுவத்தின் தாக்குதல்களால் உக்ரேன் மீதான அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராகுவார் என்றும் அவர்கள் கணித்து வந்தார்கள். ஆனால், ரஷ்யா தனது தாக்குதல்களை உக்ரேனின் எந்தப் பகுதியில் நடாத்தும் என்பது இதுவரை தெரியவில்லை.
கடந்த வார நடுப்பகுதியில் ரஷ்யாவின் ஜனாதிபதி நாட்டின் போரிடும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 137,000 பேரால் அதிகரிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தார். அதன் மூலம் போரிடத் தயாராக இருக்கும் படையினரின் எண்ணிக்கை ரஷ்யாவில் 1.15 மில்லியன் ஆகும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.
உக்ரேன் சில நாட்களுக்கு முன்பு தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடியபோது அமெரிக்கா அவர்களுக்கான இராணுவ உதவியை மேலும் அதிகரிக்கவிருப்பதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பிலோ, நாடுகளின் சார்பிலோ அதேயளவு பெரிய தொகைகள் எதுவும் சமீபத்தில் உக்ரேனின் இராணுவப் பாதுகாப்புக்காக அளிக்கப்படுவதாக அறிவிக்கப்படவில்லை. உக்ரேனைப் பொறுத்தவரை மேற்கு நாடுகளின் இராணுவ உதவியைத் தொடர்ந்து பெறும் அவசியம் இருக்கிறது. அதற்காக அவர்கள் ரஷ்யாவுடனான போரில் முன்னேற்றத்தைக் காட்டவேண்டியது அவசியமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்