காபுல் ரஷ்யத் தூதுவராலயத்துக்கு வெளியே மனிதக்குண்டு, 25 பேர் பலி.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் ரஷ்யத் தூதுவராலய வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானார்கள். பலியானவர்களில் இரண்டு பேர் ரஷ்யத் தூதுவராலயத்தின் பணிபுரிபவர்கள் என்று ரஷ்யாவின் அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. அவர்கள் பற்றிய மேலதிக விபரங்களெதுவும் வெளியிடப்படவில்லை.
தூதுவராலயத்தின் வெளியே ரஷ்யா விசாவுக்காக விண்ணப்பிக்கக் காத்திருப்பவர்களிடையேதான் குண்டு வெடித்ததாகச் ஊர்ஜிதம் செய்யமுடியாத சாட்சிகள் தெரிவிக்கின்றன. தூதுவராலய அதிகாரி ஒருவர் வெளியே வந்து விசாக்கள் பெற்றவர்களின் பெயர்களை அறிவிக்க முயன்ற சமயமே கூட்டத்தினுள் ஒருவன் தன்மீது பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்க முயன்றபோது தூதுவராலயக் காவலர்கள் அடையாளம் கண்டு அவனைச் சுட்டுக் கொன்றதாகவும் ஆயினும் குண்டு வெடித்தலிலிருந்து தப்ப முடியவில்லை என்றும் தெரியவருகிறது.
தூதுவராலய வாசலில் மிகப்பெரிய அளவில் கூட்டம் இருந்ததாகவும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் அங்கேயிருந்தவர்கள் செய்தி நிறுவனங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். தலிபான்களின் சார்பில் குண்டு வெடிப்புப் பற்றி இதுவரை எவ்வித அறிக்கைகளும் வெளியாகவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்