மேற்கு நாடுகள் ரஷ்யாவைக் கையாளும் வழிகள் தவறானவை, என்கிறார் துருக்கிய ஜனாதிபதி.
கீழைத்தேச நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதாக ரஷ்யா கூட்டிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின், உக்ரேன் துறைமுகத்திலிருந்து தானியங்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் மேற்கு நாடுகளுக்கே போவதாகச் சாடியிருந்தார். ரஷ்யா, உக்ரேன், துருக்கி, ஐ.நா ஆகியோர் செய்துகொண்ட அந்த ஒப்பந்தம் மேற்கு நாடுகளின் தேவைக்காகவே என்று அவர் விமர்சித்திருப்பதை ஏற்றுக்கொள்கிறார் துருக்கிய ஜனாதிபதி எர்டகான்.
“மேற்கு நாடுகள் ரஷ்யாவை எதிர்கொள்ளும் முறை சரியானதல்ல என்று நான் தயங்காமல் சொல்வேன். ரஷ்யாவை வேண்டுமென்றே சினமூட்டும் விதமாகவே மேற்கு நாடுகள் நடந்துகொள்கின்றன. ரஷ்யாவை நீங்கள் குறைவாக மதிப்பிடுவது தவறு, அவர்களின் பலத்தை நீங்கள் அறியவில்லை,” என்று எர்டகான் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ரஷ்யா மீது போடப்பட்டிருக்க்கும் பல முடக்கங்களால் அவர்களுடைய தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதும் தடைப்பட்டிருக்கிறது. அவற்றையும் ஏற்றுமதி செய்ய வழிவகைகள் செய்யப்படவேண்டும் என்று எர்டகான் சுட்டிக் காட்டினார். தனது நாட்டில் ரஷ்யா இணைந்து செய்யவிருக்கும் முதலீடுகள், திட்டங்களை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
உலகின் பல நாடுகளைப் போலவே துருக்கியும் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் தாக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுடனான முரண்பாடுகளால் ஏற்கனவே பல வருடங்களாக துருக்கியின் பொருளாதார நிலைமை பலவீனமாகியிருந்தது. ரஷ்ய – உக்ரேன் போரின் பக்க விளைவுகளால் அவை மோசமாக நாடு 81 % பணவீக்கத்தை எதிர்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் 2023 இல் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் பதவியைக் கைப்பற்றவேண்டும் என்று எர்டகான் திட்டமிட்டிருக்கிறார். நாட்டின் பொருளாதார நிலைமையால் அவருக்கான ஆதரவு கணிசமாகக் குறைந்திருக்கிறது. தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால் நாட்டில் முதலீடுகள் செய்யப்பட்டு, வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மேம்படவேண்டும். இந்த நிலையிலே ரஷ்யாவிடமிருந்து முதலீடுகளை எதிர்பார்த்தே புத்தினுக்கு அவர் சாமரம் வீசுவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்