உக்ரேனிடம் கைப்பற்றிய நான்கு மாகாணங்களைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டாடுகிறார் புத்தின்.
உரத்த குரலில் சர்வதேசம் எழுப்பிய எதிர்ப்புக் குரல்களை ஒதுக்கிவிட்டு ரஷ்ய ஜனாதிபதி தனது இராணுவம் உக்ரேனில் கைப்பற்றிய நான்கு மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் பட்டயத்தில் கைச்சாத்திட்டார். அவற்றை ரஷ்யாவின் பகுதிகள் என்று தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்று மேற்கு நாடுகள் அறிவித்ததுடன் அந்த நகர்வு சர்வதேசச் சட்டங்களுக்கு முற்றிலும் முரணானவை என்றும் சுட்டிக் காட்டின.
மேற்கு நாடுகள் மட்டுமன்றி முன்னர் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்து தனி நாடுகளான ரஷ்யாவின் நட்பு நாடுகளான மத்திய ஆசிய நாடுகளும் ரஷ்ய பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட அந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பகிரங்கமாகச் சொல்லியிருக்கின்றன. இவ்வார நடுப்பகுதியில் அந்தப் பகுதிகளில் வாழும் மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளில் 99 % பேர் அதற்கான ஆதரவைக் கொடுத்திருப்பதாக ரஷ்யா அறிவித்திருந்தது.
லுகான்ஸ்க், டொனெட்ஸ்க், செர்சோன், சப்பொரீட்சா [Luhansk, Donetsk, Cherson och Zaporizjzja] ஆகியவையே வெள்ளியன்று ஜனாதிபதி புத்தினால் ரஷ்யாவின் பகுதிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்டவையாகும். அப்பகுதிகளில் ரஷ்ய இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்பு, மிரட்டல் ஆகியவற்றின் மத்தியிலேயே மக்கள் வாக்களித்ததாகப் பல சாட்சியங்கள் குறிப்பிடுகின்றன. அங்கே வாழும் உக்ரேனியர்கள் வீடுகளுக்கு ஆயுதபாணியாக ரஷ்ய இராணுவத்தினர் நுழைந்து வாக்களிக்க நிர்ப்பத்தித்ததாகவும் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்ட விழாவொன்றில் அந்தப் பகுதிகள் ரஷ்யாவின் பாகங்கள் என்று வெற்றியுரைகளில் முழங்கப்பட்டன. பல ரஷ்யர்களை ஒன்றுகூட்டிப் பலத்த பாதுகாப்புடன் விழாவொன்றும் நடத்தப்பட்டது.
ரஷ்யாவுடன் ஒன்றிணைக்கப்பட்ட சப்போரிட்சாவுக்குள் இன்று காலை ஒரு ரஷ்ய இராணுவத் தாக்குதல் நடந்ததாகவும் அதில் சுமார் 25 பேர் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த நகரில் வாழும் உக்ரேனியர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கொண்டுசென்ற வாகனங்களின் மீதே அந்த ஏவுகணைத் தாக்குதல் நடந்தது. சுமார் 50 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்