வருமானவரிக்குறைத்தல் – எதிர்ப்பு மதிலில் மோதி முழுசாகத் திரும்பியது லிஸ் டுருஸ் அரசு!
பொருளாதாரத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் முதுகெலும்பை நிமிர்த்துவதாக அறைகூவிப் பதவியேற்ற லிஸ் டுருஸ் அரசு பலமான முட்டுக்கட்டையொன்றில் மோதியிருக்கிறது. தனது பொருளாதாரத் திட்டங்களின் அத்திவாரமாக நிதியமைச்சர் கிவாசி கிவார்ட்டாங் நாட்டில் அதிகம் சம்பாதிப்பவர்களுக்குப் பெரும் வரிக்குறைப்பு ஒன்றை அறிவித்திருந்தார். அதையடுத்து பிரிட்டிஷ் பவுண்ட் சர்வதேச நாணயச் சந்தையில் பலமிழந்துகொண்டிருந்தது.
ஞாயிறன்று பிபிசி நிகழ்ச்சியொன்றில் கூடத் தனது பொருளாதாரத் திட்டத்தின் சக்கரமாக இருக்கப்போகும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கான வரிக்குறைப்பிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று சூழுரைத்திருந்தார் லிஸ் டுருஸ். ஆனால், கடந்த வாரத்தைப் போலவே திங்களன்று காலையிலிருந்தும் பவுண்ட் தனது மதிப்பில் வீழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டதும் அந்த வரிக்குறைப்பை வாபஸ் வாங்கியதாக அறிவித்தார்.
நிதியமச்சர் கிவார்ட்டாங் தனது டுவீட்டில், “150,000 பவுண்டுகளுக்கும் அதிகமான வருமானத்தை வருடத்தில் ஈட்டுகிறவர்களுக்கான வரியில் ஒரு பகுதியைக் குறைப்பதன் மூலம் அவர்களுடைய கொள்வனவுப் பலத்தை அதிகரிப்பது எங்கள் திட்டம். அதன் மூலம் எங்களுடையை பொருளாதாரத்தை மலரவைக்க நாம் திட்டமிட்டிருந்தை நாணயச் சந்தை அங்கீகரிக்கவில்லை என்று புரிகிறது. எனவே, அதை நாம் செய்யப்போவதில்லை,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கொன்சர்வடிவ் கட்சிக்குள்ளேயே குறிப்பிட்ட வருமானவரிக்குறைப்புத் திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளர்ந்தெழுந்தது. லிஸ் டுருஸுக்குச் சவாலாகப் பிரதமர் வேட்பாளர்களாக இருந்தவர்களில் சிலர் அவ்விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். கட்சிக்குள் மட்டுமன்றி நாட்டிலும் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினுள்ளிருந்த வருமானவரிக்குறைப்புக்கான எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. அதைச் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பீடுகள் காட்டின. 21 % மட்டுமே கொன்சர்வடிவ் கட்சிக்கு வாக்களிக்கத் தயாராக இருக்க எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 54 % பேர் வாக்களிக்கத் தயாராக இருக்கின்றார்கள்.
அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வருமானவரிகளைக் குறைப்பது ஏழைகளிடம் வறுகிப் பணக்காரர்களுக்கு இன்னும் அதிகமாகக் கொடுப்பதாகவே கருதப்படுகிறது. அத்துடன் இதே வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மின்சாரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கான நிதியுதவியையும் பொதுமக்கள் நியாயமற்றது என்று கருதி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்